சிலாங்கூரில் வெள்ளத்தில் சேதமான பகுதிகளிலிருந்து பெரிய அளவிலான குப்பையை எடுத்துச்செல்ல தொண்டூழியர்களும் லாரிகளும் தேவை என்று சிலாங்கூர் மாநில அரசாங்கம் கூறியுள்ளது.
சிலாங்கூர் முதல் அமைச்சர் அமீருதீன் ஷாரி வியாழக்கிழமை (டிசம்பர் 23) செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசாங்கத்தின் பெரிய குப்பை லாரிகள் போக முடியாத வீதிகளுக்குள் சென்று, குப்பையாக மாறிய பொருள்களை அகற்றவும் அப்பகுதிகளைச் சுத்தப்படுத்தவும் தொண்டூழியர்களின் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
குப்பை அகற்றும் பணிகளில் 1,200 பேர் அங்கு ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல சிலாங்கூரில் தற்போது 400 லாரிகள் குப்பையை அகற்றி வருகின்றன.
ஆனால் அப்பணியைத் துரிதப்படுத்த கூடுதல் லாரிகள் தேவை என்று திரு அமீருதீன் கூறினார்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி மலேசிய பெருவெள்ளத்தில் 37 பேர் மாண்டுவிட்டனர்.
பாஹாங்கில் இன்னமும் ஏழு பேரைக் காணவில்லை.
சுமார் 18,000 குடும்பங்களைச் சேர்ந்த 68,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாஹாங், கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அபாய நிலையை நெருங்கி வருவதால் மெத்தனம் கூடாது என்று மலேசிய ராணுவம் எச்சரித்தது.
சிலாங்கூர், பாஹாங் போன்ற இடங்களில் உதவிப் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாக ராணுவம் தெரிவித்தது.

