ஊழலுக்காக சிறைசென்ற தென்கொரிய முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு

2 mins read
3c3e1745-050e-4af5-92b6-7a055e56f4d7
தென் கொரியா, ஊழல் குற்றத்துக்காக 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அதன் முன்னைய அதிபர் பார்க் கின் ஹேக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.  -

தென் கொரியா, ஊழல் குற்றத்துக்காக 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அதன் முன்னைய அதிபர் பார்க் கின் ஹேக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.

சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்டவர்களின் பட்டியலில் அவர் பெயர் இருந்ததாகவும் தேசிய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு அவர் மன்னிக்கப்பட்டதாகவும் தென் கொரிய நீதி அமைச்சர் பார்க் பியோம்-கே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24) அன்று தெரிவித்தார்.

தென்கொரியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திருவாட்டி பார்க்குக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருவாட்டி பார்க் கின் ஹே 2013ல் தென்கொரியாவின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்றார்.

ஊழல் கறைபடியாதவர், யார் பக்கமும் சாயாதவர் என்ற பிம்பத்தை அவர் உருவாக்கினார்.

ஆனால் மிகப் பெரும் ஊழல் மோசடியில் சிக்கிய அவர், 2017ல் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

திருவாட்டி பார்க்கும் அவரது தோழி சோய் சூன்-சில் என்பவரும் சாம்சங் உள்ளிட்ட பெருநிறுவனங்களிடம் இருந்து கையூட்டு வாங்கினர் என்று குற்றச்சஞ்சாட்டப்பட்டது.

அந்த ஊழல் மோசடியால் தென்கொரியாவில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.

கையூட்டு வாங்கியது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, தேர்தல் சட்டங்களை மீறியது ஆகியவற்றின் தொடர்பில் அவருக்கு ெமாத்தம் 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது 69 வயதாகும் திருவாட்டி பார்க், சிறையில் உடல்நலம் குன்றியதாகக் கூறப்படுகிறது.

திருவாட்டி பார்க்குக்கு முன்னதாக தென் கொரிய அதிபராக பதவி வகித்த லீ மியுங்-பாக்கும் ஊழல் குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்.

ஆனால் அவருக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கப்படவில்லை.