லண்டன்: மற்ற கிருமித்தொற்றுகளைக் காட்டிலும் ஓமிக்ரான் உருமாறிய தொற்று குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் அது எளிதில் தொற்றக்கூடியதாக உள்ளது என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஓமிக்ரான் உருமாறிய கிருமித்தொற்று வேகமாக பரவினாலும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து குறைவாக உள்ளதை இந்த ஆய்வு காட்டுகிறது.
டெல்டா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களைவிட ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 50 முதல் 70 விழுக்காடு குறைவாக உள்ளதாக பிரிட்டிஷ் சுகாதாரத் துறை தெரிவித்தது.
அத்துடன் அவசர கால சிகிச்சையை நாடுவோர் விகிதமும் 31 முதல் 45 விழுக்காடு குறைவாக உள்ளது என்றும் அது கூறியது.
இவை நல்ல விஷயங்களாக பார்க்கப்பட்டாலும் தடுப்பூசி குறித்த எச்சரிக்கை ஒன்றும் இதில் தெரிய வந்துள்ளது.
கூடுதல் தடுப்பூசி ஓமிக்ரானுக்கு எதிராக அதிக பாதுகாப்பு அளித்தாலும், டெல்டா கிருமியைவிட தடுப்பூசியின் செயல்திறனை ஓமிக்ரான் கிருமி வேகமாக குறைத்து விடுகிறது.
மூன்றாவது தடுப்பூசி போடப்பட்ட 10 வாரங்களுக்குப் பிறகு அதன் செயல்திறன் 15 முதல் 25 விழுக்காடு குறைத்துவிடுவதாக ஆய்வு கூறுகிறது.
இருப்பினும் மோசமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை ஓமிக்ரான் கிருமி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில், அனைவரையும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தினார்.
ஆனால், சீனாவின் சினோவேக் தடுப்பூசி ஓமிக்ரானுக்கு எதிராக போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மற்றோர் ஆய்வு காட்டுகிறது.
எனவே, சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கூடுதல் தடுப்பூசியாக வேறு நிறுவன தயாரிப்புகளைப் போட்டுக்கொள்ளலாம் என்று ஆய்வு கூறுகிறது.

