கோலாலம்பூர்: மலேசியாவின் பல பகுதிகளில் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமும் அங்கு மழை தொடரும் என்று மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகாங், சிலாங்கூரில் மழை வெள்ளத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
இது சென்ற 2014ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது ஏற்பட்ட 21 உயிரிழப்புகளைவிட அதிகமாகும். எட்டு பேரைக் காணவில்லை.
கிளந்தான், திரெங்கானு, பாகாங் ஆகிய மாநிலங்களின் பல கடலோரப் பகுதிகளில் மழை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியது.
டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30க்கு இடையில் கிழக்கு ஜோகூர், கிழக்கு சபா, மேற்கு சரவாக்கில் தொடர்ச்சியான மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த வாரம் பெய்த மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்ரீ மூடா பகுதியில் ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று வெள்ளம் வடியத் தொடங்கியது.
எனவே, மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய தொடங்கியதாக பெர்னாமா செய்தி கூறியது.
"இந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்றாலும் வெள்ள நீர் வடிவதற்கான கழிவு நீர் கால்வாய்களைச் சரி செய்வது முக்கியம்," என்றார் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர்.
இந்நிலையில், மழை, வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சில பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் மேலும் சில நிவாரண மையங்களாக செயல்படுவதாலும் பள்ளி திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சொன்னார்.
இதற்கிடையே, வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பாகாங், சிலாங்கூர் மாநிலங்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.

