ஜப்பானில் 100க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) ரத்து செய்யப்பட்டன.
நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருவதே அதற்குக் காரணம் என்று ஜப்பானின் இரு ஆகப்பெரிய விமான நிறுவனங்கள் தெரிவித்தன.
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ் நிறுவனம் 77 விமானச் சேவைகளை ரத்து செய்தது. இதனால் ஏறக்குறைய 5,100 பயணிகள் பாதிப்படைந்துள்ளனர் என்றார் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் யுத்தாக்கா கிட்டாஹாரா.
"வடகிழக்கு ஜப்பானில் வானிலை நிலவரம் தொடர்ந்து நிலையாக இல்லாததால், கூடுதலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும்," என்றார் அவர்.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணி நிலவரப்படி, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் 35 விமானச் சேவைகளை ரத்து செய்தது. இதனால் 1,810 பயணிகள் பாதிப்படைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

