கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதக் கடைசி வரையிலான தட்பவெப்ப நிலை குறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை தெரிவித்தது.
"கிளந்தானில் டிசம்பர் 30ஆம் தேதி இரவு 8 மணி முதல் அதற்கு மறுநாள் இரவு 8 மணி வரை வெள்ளப்பெருக்கு ஏற்படும். குவா மூசாங், கோலா கிராய் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான சுங்கை காலாஸ் டாபோங், சுங்கை கிளந்தான் ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகளின் தண்ணீர் அளவு அபாய அளவை எட்டக்கூடும்," என்று அந்தத் துறை எச்சரித்துள்ளது.
அந்த நாட்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மலேசியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவற்றால் மாண்டோர் எண்ணிக்கை 47 ஆகி உள்ளது என்றும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
மாண்டவர்களில் 25 பேர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் என்றும் 19 பேர் பாகாங்கையும் மூன்று பேர் கிளந்தானையும் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாரான், ராவுப், தெமெர்லோ, ஜெரான்தட், கோலா லிபிஸ் ஆகிய இடங்களில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில் 332 ராணுவ வீரர்களும் 213 காவல்துறை அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளி மீண்டும் தொடங்குவதை ஒத்தி வைப்பது குறித்து ஆய்வுசெய்யப்படும் என்று கல்வி அமைச்சர் ரெட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் மேசை, நாற்காலிகள், கணினிகள் உள்ளிட்ட தளவாடச் சாதனங்களின் சேதங்கள் குறித்து கல்வி அமைச்சு ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளச் சேதாரங்களைச் சரிசெய்து மீண்டும் பள்ளியைத் திறக்க கல்வி அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ரெட்ஸி கூறினார்.

