பாரிஸ்: பிரான்சில் புதிதாக நூறாயிரம் பேரை கொவிட்-19 தொற்றியுள்ளது. தொற்று நெருக்கடி தொடங்கிய காலத்தில் இருந்து பதிவான அன்றாடத் தொற்று எண்ணிக்கையில் இதுவே ஆக அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாகவே அன்றாடத் தொற்று சாதனை அளவு உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்நிலையில் அதிவேகமாகப் பரவக்கூடியதாகக் கருதப்படும் ஓமிக்ரான் கிருமித்தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை அறிவிக்க அந்நாடு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் நாளான நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டும் 104,611 அன்றாடத் தொட்டு பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமையன்று அந்த எண்ணிக்கை 94,124 ஆக இருந்தது. அத்துடன் புதிதாக 84 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. ஓமிக்ரான் வகை தொற்று அதிவேகத்தில் பரவக்கூடியது என்பதால் அன்றாடத் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) போட்டுக்கொள்ளும்படி கடந்த வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு சுகாதார அனுமதிச் சீட்டுகளை விநியோகிக்கத் திட்டமிட்டு உள்ளது. உணவகங்கள், பொது இடங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றுக்கு இந்த அனுமதிச் சீட்டு அவசியம்.
பிரான்சில் இதுவரை 76.5 விழுக்காட்டு மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த மாத இறுதியில் பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் கட்டாய முகக்கவச சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அண்டை நாடான இத்தாலியில் இது ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்தத் தேர்தலில் மெக்ரானுக்கு பின்னடைவைத் தரலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, கட்டுப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்க இன்று அவர் சுகாதாரப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைக் கூட்டுவார் என்று கூறப்படுகிறது.
அரசாங்கம் வரும் ஜனவரியில் இருந்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவிருக்கிறது. அதாவது, முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களே மதுபானக்கூடம், உணவகங்கள், கலாசார நிகழ்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் நுழைய முடியும் என்பதே அந்தக் கட்டுப்பாடுகள் என்று அரசாங்கப் பேச்சாளர் கேப்ரியல் அட்டல் செவ்வாய்க்கிழமையன்று கூறினார்.

