இலங்கை குடிமக்களை மணக்கும் வெளிநாட்டவர் அரசாங்க ஒப்புதல் பெறவேண்டும்

இலங்கை குடிமக்களை மணக்கும் வெளிநாட்டவர் அரசாங்க ஒப்புதல் பெறவேண்டும்

2 mins read
f3f97870-6d70-431f-8b4d-d2b4e982bee6
வெளிநாட்டவரை மணக்கும் இலங்கை நாட்டவர் முன்னதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிடுகிறது. படம்: பெக்சல்ஸ் -

இலங்கை குடிமக்கள் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வது கடினமாகவிருக்கிறது.

வெளிநாட்டவரை மணக்கும் இலங்கையர் அதற்கு முன்னதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிடுகிறது.

தற்போதைய சட்டங்களின்கீழ், வெளிநாட்டவரும் இலங்கைக் குடிமக்களும் திருமணம் செய்வதை இலங்கை தற்காப்பு அமைச்சோ, அந்நாட்டு மக்கள்தொகைப் பதிவுத் துறையோ தடுக்க முடியாது.

ஆனால் அடுத்த வாரத்திலிருந்து சட்டம் மாறுகிறது.

இலங்கை நாட்டவரை மணக்க விரும்பும் வெளிநாட்டவர், மருத்துவப் பரிசோதனையில் உடல்நலத்தை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் அவர்கள் மீது தற்காப்பு அமைச்சு பாதுகாப்பு விசாரணையை நடத்தி ஒப்புதல் தரவேண்டும்.

இலங்கையின் சண்டே டைம்ஸ் செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) அன்று அதுகுறித்த செய்தியை வெளியிட்டது.

தேசியப் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கையின் தலைமைப் பதிவாளர் W.M.வீரசேகரா அதில் கூறினார்.

இலங்கை குடிமக்களைத் திருமணம் செய்ய விரும்பும் சிலர், போதைப் பொருள் கடத்தல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அரசாங்கத்தின் இத்திட்டத்தை எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கண்டித்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள ராஜபக்‌சே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதை அவர்கள் சுட்டினர்.

அமைச்சரவைப் பொறுப்புகளை வகிக்கும் வெளிநாட்டவர் தற்காப்பு அமைச்சின் ஒப்புதல் பெறச் செய்யலாமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார்.

இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்‌சே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை அமெரிக்கக் குடியுரிமையை வைத்திருந்தார்.

பதவிக்கு வந்த பின்னர், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அரசியல் சாசனத்தில் இடம்பெற்ற சட்டத்தை அவர் அகற்றினார்.