வின்ட்சர் அரண்மனையில் வில்லம்புடன் அத்துமீறி புகுந்ததுடன், பிரிட்டனின் எலிசபெத் அரசியாரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டும் காணொளியை வெளியிட்ட இளையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் 19 வயது ஜஸ்வந்த் சிங் சயில் என்று அடையாளம் காணப்பட்டது. அவர் சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது.
1919இல் இந்தியாவில் நிகழ்ந்த ஜாலியான்வாலா படுகொலைக்குப் 'பழிதீர்க்கப்போவதாக', கையில் வில்லம்பை வைத்துக்கொண்டு மிரட்டல் விடுத்தார்.
மிரட்டல் விடுத்த காணொளியை அவர் தமது ஸ்பேன்சேட் சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
அத்துடன், அந்த இளையர் கையில் வில்லம்புடன் கயிற்றேணியியைப் பயன்படுத்தி, வின்ட்சர் அரண்மனையின் சுற்றுவேலியில் ஏறினார்.
அதைக் காட்டிய காணொளி பிரிட்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் கிறிஸ்மஸ் தினத்தன்று காலை 830 மணிக்கு நடந்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் கூறின.
எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து, இளையர் பிடிபட்டார்.
அந்த நேரத்தில் எலிசபெத் அரசியார் வின்ட்சர் அரண்மனையில்தான் இருந்தார்.
ஜஸ்வந்த் மனநலச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
காணொளியில் ஜஸ்வந்த் முகத்தைக் காட்டாது கருப்பு நிற ஆடை அணிந்து அடித்தொண்டையில் பயமுறுத்தும் தொனியில் பேசினார்.
"நான் செய்ததற்கும் செய்யப்போவதற்கும் வருந்துகிறேன். அரச குடும்பத்தின் எலிசபெத் அரசியாரைக் கொல்ல முயற்சி செய்யப்போகிறேன்," என்று அவர் காணொளியில் கூறினார்.
ஜாலியான்வாலா படுகொலைக்காகவும் இனத்தின் பேரால் கொல்லப்பட்டவர்களுக்கும் அவமானப்படுத்தப் பட்டவர்களுக்கும் பழிதீர்க்கப் போவதாக இளையர் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து கருத்துரைக்க அரச குடும்பத்தின் பேச்சாளர்கள் மறுத்துவிட்டனர்.

