கோலாலம்பூர்: மலேசியாவைச் சென்ற வாரம் புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களுக்கு இன்னமும் உதவியோ, நிதியுதவியோ கிடைக்கவில்லை என்கின்றனர்.
ரோகியா அப்துல் அஜீஸ் என்ற பெண் உணவு கேட்டு சிலாங்கூரில் உள்ள நிவாரண மையம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்களுக்குத் தான் அந்த உணவு என்று கூறி அதிகாரிகள் உணவு தர மறுத்துவிட்டதாக அவர் சொன்னார்.
தான் சற்று நேரம் காத்திருந்த பிறகும், மீதமான உணவைக்கூட அவர்கள் தரவில்லை என்று அப்பெண் கூறியதாக உள்ளூர் ஊடகச் செய்தி கூறுகிறது.
"அரசாங்க அமைப்போ, அரசியல்வாதிகளோ யாரும் உதவிக்கு வரவில்லை. நாங்கள் அகதிகளைப் போல் உணர்கிறோம்.
"உதவி தேவைக்கான விண்ணப்பங்களை 20ஆம் தேதியே அனுப்பிவிட்டோம். என்றாலும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை," என்றார் அவர்.
வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வெள்ள சேதத்தைப் பார்வையிட ஹுலு லங்காட்டிற்குப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சென்றிருந்
தார்.
அப்போது பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது. விபத்தைத் தவிர்க்கும் நோக்கிலேயே போக்குவரத்து போலிசார் அப்படிச் செய்ததாக மலேசிய போலிஸ் விளக்கம் அளித்துள்ளது.

