வாஷிங்டன்: மூக்குக் கண்ணாடி அணிந்து படிப்பவர்கள் இனி கண்ணாடியைத் தொலைத்துவிட்டு தேட வேண்டியதில்லை.
அதற்குப் பதிலாக கண்களில் இடப்படும் சொட்டு மருந்து ஒன்று அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் பயன்பாட்டிற்கு அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது கிட்டப் பார்வை பிரச்சினை உள்ளவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
'வியுட்டி' எனும் அந்த கண் சொட்டு மருந்து கண்களில் இடப்பட்ட பதினைந்தாவது நிமிடத்திலிருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.
ஒருமுறை கண்ணில் செலுத்தினால், அடுத்த ஆறு முதல் பத்து மணி நேரத்திற்கு இச்சொட்டு மருந்து திறம்பட செயல்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
30 நாள் பயன்பாட்டிற்கான இதன் விலை 80 டாலராகும் (109 வெள்ளி).
இதற்கான பரிசோதனைகளில் தீவிர பக்கவிளைவுகள் எதுவும் இல்லையென்றாலும் 14.9 விழுக்காட்டினர் தலைவலி இருப்பதாகக் கூறியுள்ளனர்.

