ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் கிருமித்தொற்றுக்கு ஆளான ஒருவர் நேற்று மாண்டுவிட்டார். ஏற்கெனவே நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 80 வயது ஆடவருக்கு நேர்ந்த அந்த மரணமே ஓமிக்ரான் தொற்றால் அந்நாட்டில் ஏற்பட்ட முதல் மரணமாகும்.
இருப்பினும் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அங்கு அன்றாடத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.
மலேசியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் 3,000த்திற்கும் குறைவான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இதற்கிடையே, சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய இருவருக்கு பினாங்கில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
தென்கொரிய அரசாங்கம் ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 மாத்திரைகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி அளித்து
உள்ளது.
ஃபைசரின் 'பேக்ஸ்லோவிட்' எனும் மாத்திரை, தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அல்லது வீட்டில் இருந்து குணமடைவோரின் உடல்நிலை மோசமாவதைத் தடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக உணவு, மருந்து பாதுகாப்பு அமைச்சர் கிம் கேங்-லிப் சொன்னார்.
லேசான அல்லது மிதமான கொவிட்-19 அறிகுறிகள் உடைய, 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 40 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை கொண்டவர்களுக்கு இந்த மாத்திரை கொடுக்கப்படும்.
ஹாங்காங் அரசாங்கம் கொரியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய இரண்டு வாரத்திற்கு (ஜனவரி 8 வரை) தடை விதித்துள்ளது.
சென்ற வாரம் அந்த விமானத்தின் மூலம் தென்கொரியாவில் இருந்து ஹாங்காங்கிற்குச் சென்ற 12 பயணிகளுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷியான் நகரத்தில் கிருமிதொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஐந்தாவது நாளாக முடக்கநிலை நீடிக்கிறது.
இந்நிலையில், அந்நகரம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அத்துடன் அங்கு நான்காவது முறை ஒட்டுமொத்த பரிசோதனைக்கு அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
மியன்மாரில் ராணுவ ஆட்சிக் குழுவிடமிருந்து மறைந்து வாழும் தாதியர் சிலர் கொவிட்-19 நோயாளிகளுக்கும் போராளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ராணுவ ஆட்சியை எதிர்த்து பல மருத்துவ ஊழியர்கள் மியன்மார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிவிட்டனர்.
ஆனால் தங்கள் பணியைத் தொடரும் நோக்கிலும் கொவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் நோக்கிலும் தற்காலிக மருத்துவமனைகள் மூலம் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்கின்றனர். நோயாளிகள் அழைத்தால், அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

