8,000 ஆண்டுகளுக்கு நாடு திரும்பமுடியாத வழக்கில் சிக்கியுள்ள ஆடவர்

8,000 ஆண்டுகளுக்கு நாடு திரும்பமுடியாத வழக்கில் சிக்கியுள்ள ஆடவர்

2 mins read
ecadb769-4118-49dc-bb17-ca7dc09691fe
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நொவாம் ஹுப்பர்ட். படம்: இணையம் -

தங்களது குழந்தைகளுக்குரிய மாதாந்திர உதவிப் பணத்தை வழங்கவேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலிய ஆடவருக்கு எதிராக அவருடைய முன்னாள் மனைவி தொடுத்த வழக்கில், அந்த ஆடவர் 8,000 ஆண்டுகளுக்கு இஸ்ரேலை விட்டு வெளியேற முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நொவாம் ஹுப்பர்ட் என்பவருக்கும் இஸ்ரேலைச் சேர்ந்த அவருடைய மனைவிக்கும் இடையில் மணவிலக்கு ஏற்பட்டதை அடுத்து, அந்த மாது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு 2011ல் இஸ்ரேல் சென்றுவிட்டார். அப்போது ஒரு குழந்தைக்கு ஐந்து வயது, மற்றொரு குழந்தைக்கு மூன்று மாதங்கள்.

இதைத் தொடர்ந்து தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக நொவாம் ஹுப்பர்ட் 2012ல் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.

அப்போது, தனது குழந்தைகளுக்கு முன்னாள் கணவரிடமிருந்து உதவியைக் கோரும் வழக்கு ஒன்றை அவருடைய முன்னாள் மனைவி இஸ்ரேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின்படி, இரண்டு குழந்தைகளும் 18 வயதாகும்வரை ஒவ்வொரு மாதமும் தலா 5,000 ஷெக்கலை (இஸ்ரேலிய நாணயம்) ஹுப்பர்ட் வழங்கவேண்டும் என்று அந்த மாது கோரியிருந்தார்.

இவ்வாறு அவர் செலுத்த வேண்டிய பணத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 3.34 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உதவிப் பணத்தை ஹுப்பர்ட் வழங்கமுடியாவிட்டால், 9999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை இஸ்ரேலை விட்டு அவர் வெளியேறமுடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலில் அகப்பட்டிருக்கும் ஹுப்பர்ட், இந்தச் சிக்கலில் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி பொது அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பெண்களைத் திருமணம் செய்து மணவிலக்கு செய்துகொண்ட நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.