செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9dd3491e-0963-4c8f-9b26-e02c88c4cfb7
-

இங்கிலாந்தில் புத்தாண்டு வரை கட்டுப்பாடுகள் இல்லை

லண்டன்: 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிதாக எவ்விதமான தொற்றுக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படாது என்று பிரிட்டனின் சுகாதார அமைச்சர் சாஜிட் ஜாவிட் நேற்று கூறினார்.

"புத்தாண்டு பிறக்கும் வரை புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாது. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குப் பிறகு தொற்று எண்ணிக்கை அதிகரித்தது என்றால் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம்," என்று அமைச்சர் சாஜிட் கூறினார்.

இங்கிலாந்தின் அன்றாடத் தொற்றுப் பதிவுகளில் 90 விழுக்காடு ஓமிக்ரான் வகை கொரோனாதான். எனவே மக்கள் இந்தப் புத்தாண்டை மிகவும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் கொண்டாட வேண்டும் என சாஜிட் கேட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் நேற்று முன்தினம் 98,515 புதிய தொற்று பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிளந்தானில் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொலை

கோத்தா பாரு: ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்தல், போதைப்பொருள் கடத்தல் என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 'அடிக் மாட்' என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர், காவல்துறையுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு வயது 29, மற்றவருக்கு வயது 36. அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதை கிளந்தான் மாநில காவல்துறை தலைவர் ஷாபீன் மாமாட் நேற்று தெரிவித்தார். கொல்லப்பட்ட 29 வயது ஆடவர், அந்த குண்டர் கும்பலின் தலைவராக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. குவா மூசாங்கில் உள்ள கம்போங் பத்து பாப்பான் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்கா - ரஷ்யா

பாதுகாப்புப் பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: உக்ரேனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா, தனது படைகளைக் குவித்து வருகிறது. அதனால் அப்பகுதியை போர்மேகம் சூழ்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் உள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஜனவரி 12ஆம் தேதி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக ரஷ்யாவுடன் ஜனவரி 10ஆம் தேதி, பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.