கெய்ரோ: சிரியாவின் லதாகியா நகரில் உள்ள முக்கிய வர்த்தகத் துறைமுகத்தில் இஸ்ரேல் நேற்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அந்தத் துறைமுகத்தின் கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அந்தத் துறைமுகப் பகுதியில் தீ பற்றி எரிகிறது. ஏராளமான கொள்கலன்களும் அவற்றில் உள்ள சரக்குகளும் நெருப்பில் சாம்பலாயின.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் துறைமுகம் மட்டுமின்றி மருத்துவமனை, குடியிருப்புக் கட்டடங்கள், கடைகள் ஆகியவையும் பலத்த சேதமடைந்துள்ளன என்று சிரியாவின் அரசு ஊடகம் ஒன்று தெரிவித்தது.
சிரியா மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் ஈரானிய ஆதரவுப் போராளிகளை இலக்காகக் கொண்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
டிசம்பர் மாதத்தில் சிரியாவின் முக்கிய பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இரண்டாவது தாக்குதல் இது என்று சிரியாவின் அரசாங்க ஊடகமான சானா தெரிவித்தது.
திங்கள்கிழமை பின்னிரவு 3.21 மணிக்கு மத்திய தரைக்கடல் வழியாக லதாகியா துறைமுகத்தில் உள்ள கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்தது.
2011ஆம் ஆண்டில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் அந்நாட்டின் மீது பலமுறை விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிரியா நாட்டு அரசாங்கம், அதன் கூட்டணிப் படையான ஈரான் ஆதரவுப்படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் ஆகியோருக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்ற தாக்குதலை சிரியா டிசம்பர் 7ஆம் தேதி மேற்கொண்டது. அந்தத் தாக்குதல் லதாகியா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரான் நாட்டு ஆயுதக் கப்பலை இலக்கு வைத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.