கோலாலம்பூர்: மலேசியாவின் தாமான் டுட்டாவில் உள்ள 'தி செரி டுட்டா 1' கொண்டோமினிய அடுக்குமாடிக் கட்டடத்தின் கட்டமைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதால் அது மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பு அற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட நிலச்சரிவின் அருகேயுள்ள கொண்டோமினிய அடுக்குமாடிக் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதில் இருக்கும் குடியிருப்புவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகிறது அந்த கொண்டோமினிய நிர்வாகம்.
மலேசியாவின் பொதுப் பணித் துறை, மலேசிய பொதுப் பணி கழகம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் மேற்கொண்ட சோதனையில் அந்த அடுக்குமாடிக் கட்டடம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்தப் பகுதியில் மோசமான நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அவ்வாறு ஏற்பட்டால் கட்டடத்தின் கட்டமைப்பை அது பாதிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அந்தப் பகுதியில் மொத்தம் 14 அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும் மூன்று முதல் ஆறு மாடிகள் உள்ளன.
இவற்றில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு கொண்டோமினிய அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிக்கும் 34 வீடுகளில் குடியிருப்போரை உடனடியாக காலிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலைப்பாங்கான பகுதியில் கட்டடத்தின் அடிப்பகுதியில் உள்ள மண் சரிந்து ஆபத்தான நிலையில் இருக்கும் அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றின் புகைப்படத்தை இணையவாசிகள் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

