நடந்து சென்றுகொண்டு இருந்தவரை மின்னல் தாக்கியது; காணொளியில் பதிவான சம்பவம்

நடந்து சென்றுகொண்டு இருந்தவரை மின்னல் தாக்கியது; காணொளியில் பதிவான சம்பவம்

1 mins read
a15842e5-1042-4c59-84a5-d7cf3ea808e1
காணொளிப் படம் -

மழை பெய்துகொண்டிருந்தபோது குடையைப் பிடித்து நடந்து சென்றுகொண்டிருந்த ஆடவரை மின்னல் தாக்கிய சம்பவம் ஒன்று இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நிகழ்ந்தது.

அந்தச் சம்பவத்தைக் காட்டும் சிசிடிவி காணொளிப் பதிவு ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நிறுவனம் ஒன்றில் பாதுகாவல் அதிகாரியாகப் பணிபுரிந்த 35 வயது ஆடவர் ஒருவர், பணியில் இருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

குடையைப் பிடித்து நடந்து சென்றுகொண்டிருந்த அவரை திடீரென மின்னல் தாக்கியதில், தீப்பொறிகள் பறந்தன.

தரையில் விழுந்து கிடந்த அவரைக் காப்பாற்ற அங்கிருந்த பலரும் அவரை நோக்கி ஓடி வந்தனர்.

சக ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீக்காயங்களுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தற்போது ஓய்வெடுத்து வருவதாக இந்தியா டைம்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அந்த ஆடவரை மின்னல் தாக்கியதற்கு அவர் கையில் வைத்திருந்த 'வாக்கி-டாக்கி' சாதனமே காரணம் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ, அவர் வைத்திருந்த குடையே காரணம் என்றனர்.