ஹாங்காங்: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு காவல்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள், அதிரடிச் சோதனைகளை நடத்தி இணையச் செய்தியை நடத்தும் நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிராக 'ஸ்டாண்ட் நியூஸ்' ஊடகம் செயல் படுவதாகக் கூறி தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறுவருக்கும் வயது 34 முதல் 73 வரை. 'ஸ்டாண்ட் நியூஸ்' தற்போதைய, முன்னாள் இயக்குநர்கள், மூத்த ஊழியர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து விலகிய சுங் புய் குவெனும் கைது செய்யப்பட்டு உள்ளார். தேசத் துரோக வெளியீடுகளை வெளியிட சதி செய்ததாக ஆறு பேர் மீதும் குற்றம்சாட்டப்படும் எனத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட காவல்துறை, இணையச்செய்தி நிறுவனத்தில் ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக தேசிய பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர் என்று தெரிவித்தது.
சீருடை அணிந்த சீருடை அணியாத 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அது சொன்னது.
மற்றொரு நிலவரத்தில் ஹாங்காங் செய்தியாளர் சங்கத்தின் தலைவராக உள்ள ஸ்டாண்ட் நியூஸ் ஊடகத்தின் துணை ஆசிரியரான ரோன்சன் சானும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.

