லிவர்பூலைப் போலவே பிரிமியர் லீக் காற்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இருக்கும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில் செளத்ஹேம்டன் குழுவை வெற்றி கொள்ள முடியாமல் திணறியது.
இத்தனைக்கும் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் இரண்டு தப்பாட்டத்திற்காக இரண்டு முறை மஞ்சள் நிற அட்டை காண்பிக்கப்பட்டு சௌத்ஹேம்டனின் முகம்மது சலிசு என்பவர் திடலை விட்டு விலக வேண்டியதாயிற்று.
ஆட்டத்தின் முதல் கோலை செளத்ஹேம்டனின் வார்ட் பிரவுஸ் என்பவர் 25வது நிமிடத்தில் போட்டார். பின்னர், முகம்மது சலிசுவின் தப்பாட்டம் காரணமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பால் ஸ்பர்ஸின் ஹேரி கேன் கோல் போட ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.
அதன்பின் ஸ்பர்ஸ் எவ்வளவோ முயன்றும் அதனால் அடுத்த கோலை போட முடியவில்லை.
ஸ்பர்ஸ் வெற்றி பெற முடியாத ஏமாற்றம் குறித்துப் பேசிய அதன் நிர்வாகி அண்டோனியோ கோன்டே, "எனது எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமானவை. ஏனெனில் போட்டியில் வெற்றி பெறுவதுதான் நான் வழக்கமாக எதிர்பார்க்கும் ஒன்று. நிச்சயம் இது எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம்தான்.
"எனது குழு பெரும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இதுபோன்ற ஆட்டங்களில் நாம் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளை முழுவதுமாகப் பெற்றிருக்க வேண்டும்," என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

