வாஷிங்டன்: உலகளவில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் உலக நாடுகள் பலவும் தனிமைப்படுத்தும் நாள்களைக் குறைத்து வருகின்றன.
தொற்றுக்கு ஆளான, தொற்றுக்கு ஆளானவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும்போது, அது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ஊழியர்கள் அதிக காலத்திற்குத் தனிமைப்படுத்தப்படும் போது, வர்த்தக நிறுவனங்களை நடத்துவது சிரமமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இதன் காரணமாக, தனிமைப்படுத்தும் நாள்களைப் பல நாடுகள் குறைத்துள்ளன.
தொற்றுக்கு ஆளானவர்கள் அல்லது தொற்று இருந்தவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை 10 நாள்களில் இருந்து ஏழு நாள்களாகக் குறைத்துள்ளது ஸ்பெயின்.
அதே சமயம், தொற்றுக்கு ஆளானவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தும் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது குறித்து இத்தாலி பரிசீலித்து வருகிறது.
தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத பட்சத்தில், அவர்கள் ஐந்து நாள்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்பு அது 10 நாட்களாக இருந்தது.
தொற்றுக்கு ஆளானவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஏழு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று அறிவித்தார்.

