ஆடவரின் கையைக் கடித்த புலி சுட்டுக்கொல்லப்பட்டது
ஃபுளோரிடா: ஃபுளோரிடா விலங்கியல் தோட்டத்தில் புலியிடம் சிக்கிய துப்புரவு ஊழியர் காப்பாற்றப்பட்டார்.
விலங்குக்காட்சி சாலையில் பார்வையாளர் நேரம் முடிந்த பிறகு துப்புரவு ஊழியர் ஒருவர் பொது இடங்களைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புலி கூண்டிற்கு அருகில் உள்ள 'அனுமதி மறுக்கப்பட்ட' இடத்திற்குள் அவர் நுழைந்தார். கூண்டைச் சுற்றியிருந்த வேலியில் அவர் கையை வைத்தவுடன் புலி அவரின் கையைப் பிடித்து இழுத்துவிட்டது.
அங்கிருந்த விலங்கியல் தோட்ட அதிகாரி ஒருவர், புலியைச் சுட்டுக்கொன்று ஊழியரைக் காப்பாற்றினார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தைச் சுத்தம் செய்வதற்குத் துப்பரவு ஊழியர்களுக்கு அனுமதி இல்லை என்று விலங்குக்காட்சி கூறியது.
மியன்மாரில் 30 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன: கிளர்ச்சிக் குழு
யங்கூன்: மியன்மாரில் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட
30 பேரின் உடல் பகுதிகள் புதைக்கப்பட்டதாக அந்நாட்டின் கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்தது.
டிசம்பர் 24ஆம் தேதியன்று மியன்மாரின் காயா மாநிலத்தில் உள்ள மியா சோ கிராமத்தில் நடத்தப்பட்ட இந்த மிருகவெறித் தாக்குதலுக்கு மியன்மார் ராணுவமே காரணமே என்று எதிர் பிரிவினர் குற்றம்சாட்டினர்.
"உடல்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. கண்டெடுக்கப்பட்ட உடல்களைப் புதைத்துவிட்டோம்," என்று ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்படும் பெரும் படைகளில் ஒன்றான கரென்னி தேசிய பாதுகாப்புப் படையின் தளபதி கூறினார்.
நான்கு பிள்ளைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அமைப்பு, நாட்டில் நிலவும் வன்முறைக்கு முடிவு கட்டுமாறும் கூறியது.
கொவிட்-19: மெக்சிகோவும் சீனாவிடம் இழப்பீடு கோருகிறது
மெக்சிகோ: கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்காகச் சீனாவிடமும் உலகச் சுகாதார நிறுவனத்திடமும் இழப்பீடு கோரும் பட்டியலில் புதிதாக மெக்சிகோ குடிமக்களும் சேர்ந்துள்ளனர்.
கிருமித்தொற்றால் மாண்ட ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் 800,000 டாலர் இழப்பீடு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பியூனஸ் ஏர்ஸைச் சேர்ந்த அனைத்துலகச் சட்ட அலுவலகம் இதற்காக ஏற்பாடு செய்துள்ள சட்ட ஆவணத்தில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
சீனா, உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கவனமின்மையால் கிருமிப் பரவல் நேர்ந்ததாக அந்த அலுவலகப் பிரதிநிதி குற்றஞ்சாட்டினார்.
மில்லியன்கணக்கான டாலர் இழப்பீடு கோரும் அந்தக் கோரிக்கை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

