கோலாலம்பூர்: மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அபாயகரமான அளவில் தொடர் கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கிளந்தான், திரெங்கானு, பாகாங், ஜோகூர் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள கிழக்கு கடற்கரை மாவட்டங்களுக்கு உச்சநிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மற்ற மாவட்டங்களுக்கு இன்று வரை 2ம் நிலை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆறு மணி நேரத்தில் 60 மி.மீ. மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
இருப்பினும் நேற்று முன்தினமே மழை பெய்யத் தொடங்கிவிட்ட நிலையில், கிளந்தான் நிவாரண மையங்களில் கிட்டத்தட்ட 1,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர். ஜெலி, குலா கராய் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மெர்சிங் மாவட்டத்தில் உள்ள கடலில் உயரமான அலைகள் எழும்புவதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கனமழையால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளைச் சமாளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தயார் நிலையில் உள்ளது.
இதற்காக நாடு முழுவதிலும் 86 இடங்களில் ஆயுதப் படையினரும் மீட்பு வாகனங்களும் தயாராக உள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் ஹிஸாமுதின் சொன்னார்.
இப்பணியில் 115 அதிகாரிகள், 2,768 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆறு பெரிய டிரக்குகள், மூன்று சிறிய டிரக்குகள், 129 படகுகள் மற்றும் 109 இயந்திர படகுகளும் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.
பேரிடர் ஏற்பட்டால் மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 4,000 பணியாளர்கள் தயாராக இருப்பதாக ஜோகூர் போலிஸ் தெரிவித்துள்ளது. படகுகள், நான்கு சக்கர வாகனங்களும் தயாராக உள்ளதாக அது கூறியது.
சென்ற வாரம் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சில மாநிலங்கள் இன்னமும் மீளாத நிலையில், அங்கு மீண்டும் பெய்யவிருக்கும் மழை, நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

