பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பாகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழியக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் நாளை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் தொடர்ந்து கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேராக் மாநிலத்தின் தெற்குப் பகுதி, சிலாங்கூர், தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் நாளை மறுநாள் வரை தொடர்ந்து மழை பொழியும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. சாபா மாநிலத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியின் சில இடங்களிலும் நாளை மறுநாள் வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜோகூர் மாநிலத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. செகாமாட் பகுதியில் குறைந்தது 133 குடும்பங்களைச் சேர்ந்த 456 பேருக்காக எட்டு பாதுகாப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டன. முன்னதாக, ஜோகூரின் சுங்கை மூவார், சுங்கை தங்காக் ஆகிய இரண்டு ஆறுகளில் நீரின் அளவு அபாயகரமான நிலைக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சாபா, நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாநிலங்களிலும் வீடுகளைவிட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்போவதாகவும் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி வாக்குறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 61,000 ரிங்கிட் வரையிலான நிதியுதவி இதில் அடங்கும்.
சென்ற மாதம் 27ஆம் தேதியிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 ரிங்கிட் நிதியதவி வழங்கப்பட்டுவருகிறது. "இந்த நடவடிக்கை 45,000க்கும் அதிகமான குடும்பங்களுக்குப் பலனளிக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிகக் கூடங்களுக்குப் போகாதோரை நாங்கள் அடையாளம் கண்டு முடித்தவுடன் இந்த நடவடிக்கையால் பலனடையும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்," என்று திரு இஸ்மாயில் கூறியதாக மலே மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்தது. மேலும், நீண்ட காலத்தில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க, ஆறுகளையும் சாக்கடைகளையும் மேலும் ஆழமாக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மலேசியா ஆராய்வதாகவும் திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.

