உடலில் இருந்து பிரியும் காற்றை ஜாடியில் விற்று பணம் சம்பாதித்து வந்த அமெரிக்க ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரம் ஒருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஸ்டெஃபனி மேட்டோ எனும் இந்த 31 வயது பெண், அண்மையில் டிக்டாக் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். தம் உடலில் இருந்து பிரியும் காற்றை ஜாடியில் சேமித்து அதை வாடிக்கையாளர்களிடம் விற்று வந்ததாக இவர் கூறினார். அத்தகைய ஒரு ஜாடி $1,000 வரை விலைபோகுமாம்!
இவரது அபான வாயுவை நுகர்வதற்காகவே தனி பட்டாளம் உள்ளது. ஒரு கட்டத்தில், வாரம் ஒன்றுக்கு 50 ஜாடிகள் வரை விற்பனையாகும் அளவிற்கு தேவை அதிகரித்ததாக மேட்டோ கூறினார்.
எனினும், இவருடைய ஆரோக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, பெரும் லாபம் தந்த இந்தத் தொழிலைத் தாம் கைவிடுவதாக இவர் அறிவித்துள்ளார்.
"எனக்குப் பக்கவாதம் ஏற்பட்டுவிட்டதாகவும் வாழ்வின் கடைசி தருணங்களை எட்டிவிட்டேன் என்றும் நான் அஞ்சினேன். உடலில் இருந்து நான் அளவுக்கு அதிகமாக காற்றை வெளியேற்றினேன்," என்று மேட்டோ சொன்னார்.
அதிக காற்றை வெளியேற்றுவதற்காக பயறு வகை, முட்டை, புரத பானங்களை இவர் அருந்தி வந்தார்.
"மூச்சை இழுத்து விடுவதற்கு சற்று சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் மூச்சை இழுத்து விட்டபோது இதயத்தில் ஏதோ சுருக்கென்று குத்துவதுபோல உணர்ந்தேன்," என்று மேட்டோ நினைவுகூர்ந்தார்.
மருத்துவமனைக்குச் சென்ற இவர், தமக்கு ஏற்பட்டது பக்கவாதமோ மாரடைப்போ இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். உடலில் வாயு அதிகமாக சேர்ந்துவிட்டதால் வலி ஏற்பட்டது என்பதை இவர் அறிந்தார்.
"எனது உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால், எனது தொழிலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது," என்றார் மேட்டோ.

