பரிசுச்சீட்டை விற்றவருடன் பரிசுத்தொகையைப் பகிர்ந்துகொண்டார்!

பரிசுச்சீட்டை விற்றவருடன் பரிசுத்தொகையைப் பகிர்ந்துகொண்டார்!

1 mins read
34098209-72a3-46a9-b7c0-1f1aac4cfd79
பரிசுச்சீட்டை விற்ற காசாளருக்குப் பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தளித்தார் இந்த 86 வயது மூதாட்டி. காணொளிப்படம் -

கலிஃபோர்னியா: எல்லா நாளும் ஒருவர் அதிர்ஷ்டக் குலுக்கலில் (lottery) வெல்வதில்லை. ஒருவேளை, அப்படி அதிர்ஷ்டம் கதவைத் தட்டினாலும் பரிசுத்தொகையைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது அரிதினும் அரிது.

அப்படியொரு நிகழ்வு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மரியான் ஃபாரஸ்ட் எனும் 86 வயது மூதாட்டி, தமக்குக் கிடைத்த 300 டாலர் பரிசுத்தொகையை அச்சீட்டை விற்றவருடன் பகிர்ந்துகொண்டு வியப்பளித்துள்ளார்.

அங்குள்ள 'டியூக்ஸ் மினி மார்ட்'டில் காசாளராகப் பணிபுரியும் வால்ட்டர் என்பவர், வாடிக்கையாக கடைக்கு வந்துசெல்லும் திருவாட்டி ஃபாரஸ்ட்டிடம் எடுத்துக்கூறி, அந்தப் பரிசுச்சீட்டை வாங்கும்படி செய்துள்ளார்.

அந்த 'ஃபேன்டசி 5 லோட்டோ' அதிர்ஷ்டக் குலுக்கலின் முதல் பரிசு 500,000 டாலர். அப்போது, தமக்கு முதல் பரிசு கிடைத்தால் வால்ட்டரைத் தாம் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்தார் திருவாட்டி ஃபாரஸ்ட்.

ஆயினும், அதிர்ஷ்டக் குலுக்கலில் அவருக்கு முதல் பரிசு விழவில்லை; 300 டாலரே கிடைத்தது.

Watch on YouTube

இருப்பினும், சொன்ன சொல் மாறாமல், பரிசுத்தொகையில் பாதியான 150 டாலரைக் காசாளர் வால்ட்டருக்குப் பகிர்ந்தளித்தார் திருவாட்டி ஃபாரஸ்ட். அம்மூதாட்டியின் செயலால் வியந்துபோனார் வால்ட்டர்.

"உலகிலேயே இனிமையான ஆடவர் இவர்தான்," என்று வால்ட்டரைப் புகழ்ந்தார் திருவாட்டி ஃபாரஸ்ட். இருவரும் ஆர அணைத்து, கொண்டாடிய அத்தருணத்தைக் கண்ட சிலர், கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இக்காணொளி பல்வேறு சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.