செர்பியாவைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான நோவக் ஜோக்கோவிச்சுக்கு தொற்று ஏற்பட்டதால் தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் அவருக்குத் தொற்று ஏற்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு சளிக்காய்ச்சல் அறிகுறி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக ஜோகோவிச் மெல்பர்ன் நகருக்கு வந்தார்.
ஆனால் தடாலடியாக அவரை தடுத்து நிறுத்திய ஆஸ்திரேலிய குடிநுழைவுத் துறையினர், முன்பு வழங்கப்பட்ட விசாவையும் ரத்து செய்தனர்.
தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கான தகுந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் அவருக்குத் தொற்று ஏற்பட்டதால் தடுப்பூசி போடவில்லை என்பது சரியான காரணமல்ல என்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதனால் தற்காலிகமாக அவர் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்ட தாகக் கூறப்பட்டது.
ஆரம்பத்தில் தடுப்பூசி போடாத ஜோக்கோவிச் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று விக்டோரியா மாநில அரசாங்கம் அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.
அவருக்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்கப்படலாம் என்று பலர் கேள்வி எழுப்பினர்.
மெல்பர்ன் நகரில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு அவரது ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் ஜோக்கோவிச் தடுப்பூசி போடாததற்கான ஆவணங்களை குடிநுழைவுத் துறையிடம் வழங்கியிருப்பதாகவும் நாட்டுக்குள் நுழைய தற்காலிக விசா அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் நேற்று தெரிவித்தனர்.
இதற்கிடையே தடுப்பூசி போடாமல் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட இதர சில வீரர்கள் குறித்தும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதில் செக் குடியரசு வீராங்கனை ரெனாடா வோரகோவா வின் விசாவும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வரும் திங்கள்கிழமை அன்று ஆஸ்திரேலியாவுக்குள் ஜோக்கோவிச் அனுமதிக்காதது குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

