கோலாலம்பூர்: மலேசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் காரணமாக, சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் வரை காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் என்று கூறப்படுகிறது.
தொடர் கனமழையால், மலேசியாவில் கீரைத் தோட்டம் முதல் வாத்து பண்னை வரை அனைத்தும் நாசமாகிவிட்டன.
ஜோகூரில் அசிம் ஓமர் என்பவரின் வாத்து பண்ணை வெள்ளநீரில் மூழ்கியதில், அவர் கிட்டத்தட்ட 800 வாத்துகளை இழக்க நேரிட்டது. அத்துடன் 1,200 முட்டைகளையும் வீசி எறிய வேண்டியிருந்ததாகவும் குறைந்தது 15,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இம்மாதத்தில் அறுவடைக்காக காத்திருந்த மிளகாய் பயிர்கள் சேதமடைந்ததால் 100,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக அகமது இர்ஹாம் முகமது நூர் சொன்னார்.
இதன் காரணமாக சிங்கப்பூருக்கான ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூரில் யோங் கா காய்கறிப் பண்ணையின் மேலாளர் பெர்னார்ட் தெஹ் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டிற்குள், சிங்கப்பூருக்கான வழக்கமான கீரை விநியோகம் 80 விழுக்காடு வரை மீளும் என்றார் அவர்.
"வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவு காரணமாக, சீனப் புத்தாண்டு, நோன்புக் காலம் வரை காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும்.
"நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், நோன்பு காலத்திற்குத் தேவையானவற்றை விவசாயிகளால் உரிய நேரத்தில் பயிர் செய்ய முடியாது.
"ஜோகூர், சிலாங்கூர், பாகாங் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பல விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தற்போது போதுமான வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இல்லை," என்று காய்கறி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் லிம் செர் க்வீ கூறினார். விநியோக நெருக்கடி காரணமாக காய்கறிகளின்வி லை 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

