அதிர்ஷ்டமில்லாத ஸ்பர்ஸ், லீக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செல்சி
லண்டன்: லீக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது செல்சி. ஸ்பர்ஸ் குழுவின் சொந்த மண்ணில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், 18வது நிமிடமே கோல் போட்டுவிட்டது செல்சி. சென்ற வாரம் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 2-0 என்று வென்றிருந்த செல்சியை எதிரணி மண்ணில் விழுந்த அந்த கோல் இறுதிப் போட்டிக்கு முன்னேற செய்தது.
செல்சியின் தப்பாட்டம் காரணமாக ஸ்பர்ஸ் குழுவிற்கு களநடுவர் வழங்கிய பெனால்டி வாய்ப்புகள் 'விஏஆர்' எனும் காணொளி உதவி ஆய்வு மூலம் நிராகரிக்கப்பட்டன. போதாதற்கு ஹேரி கேன் வலைக்குள் அனுப்பிய பந்தும் 'ஆஃப்சைட்' என்று கோலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, 3-0 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் வென்ற செல்சி, பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் லிவர்பூல் அல்லது ஆர்சனலை எதிர்கொள்ளும்.
ஸ்பானிய சூப்பர் கிண்ணம்: இறுதிப் போட்டியில் ரியால் மட்ரிட்
மட்ரிட்: ஸ்பானிய சூப்பர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தனது பரம எதிரியான பார்சிலோனவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ரியால் மட்ரிட். இரு குழுக்களும் மாறி மாறி போட்ட கோல்களால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரம் விளையாடப்பட்டது. ரியால் மட்ரிட்டின் 25வது நிமிடத்தில் போட்ட கோலை 42வது நிமிடத்தில் பார்சிலோனா சமன் செய்தது. 72வது நிமிடத்தில் கரிம் பென்சிமா போட்ட கோலால், ரியால் மட்ரிட் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது. ஆனால், 83வது நிமிடத்தில் பார்சிலோனா மீண்டும் ஒரு கோல் போட ஆட்டம் சமநிலை கண்டது.
அதைத் தொடர்ந்து விளையாடப்பட்ட கூடுதல் நேரத்தில், ஃபெட்ரிகோ வேலவெர்ட்டே ஒரு கோல் போட 3-2 என்ற கோல்கணக்கில் ரியால் மட்ரிட் வெற்றி பெற்றது. ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில், அட்லெட்டிகோ மட்ரிட் அல்லது அத்லெட்டிக் பில்பாவ் குழுவை எதிர்த்து ரியால் மட்ரிட் விளையாடவுள்ளது.
இந்திய பொதுவிருது பூப்பந்து: காலிறுதியில் சிங்கப்பூர் வீரர் லோ
சிங்கப்பூர்: உலக வெற்றியாளரான சிங்கப்பூர் பூப்பந்து வீரர் லோ, இந்திய பொதுவிருது போட்டியின் காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறார். அதற்கு முந்தைய ஆட்டத்தில், மலேசியாவின் சோங் ஜோ வென்னை 21-12, 21-12 என 33 நிமிடங்களில் வீழ்த்தினார் லோ. இன்று நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் அவர் ரஷ்ய அல்லது ஃபின்லாந்து வீரரை எதிர்கொள்கிறார்.
லோ, இந்திய பொதுவிருது பட்டத்தை வெல்லும் பட்சத்தில் 400,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை அவர் பெறுவார். அத்துடன் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தைப் பின்னுக்குத் தள்ளி, தரவரிசையில் முன்னிலை வகிக்கும் 10 வீரர்களில் ஒருவராகவும் லோ திகழ்வார்.
கிருமித்தொற்று காரணமாக இந்திய வீரர் ஸ்ரீகாந்த் உட்பட ஏழு பேர் இந்திய பொதுவிருதுப் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

