1,000 செல்ஃபி எடுத்து $1 மி. சம்பாதித்த இளையர்

2 mins read
b01214a8-34bf-413e-85c8-d09b54db805e
இந்தோனீசிய இளையர் கொஸாலி கொஸாலு நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த செல்ஃபி படங்களை விற்று $1 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது $1.3 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி சம்பாதித்துள்ளார். படம்: ஓப்பன்சீ இணையத்தளம் -

செல்ஃபி படம் எடுத்தே செல்வந்தர் ஆகியிருக்கிறார் இந்தோனீசிய ஆடவர் ஒருவர்.

கொஸாலி கொஸாலு எனும் இந்தோனீசிய இளையர் நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அந்த செல்ஃபி படங்களை விற்று $1 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது $1.3 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி சம்பாதித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் தன் கணினி முன்னால் அமர்ந்து செல்ஃபி எடுத்து வந்தார்.

அவற்றை எல்லாம் திரட்டி காணொளியாக்கி, பட்டம் பெறும் நாள் அன்று பயன்படுத்தலாம் என்பதுதான் அவரது எண்ணம்.

ஆனால் இணையத்தில் மின்னிலக்க நாணயங்களும் பிளோக்செயின் தொழில்நுட்பமும் பெரும் பணம் ஈட்டுவதைப் பார்த்த அவருக்கு ஒரு யோசனை பிறந்துள்ளது.

தாம் எடுத்த 1,000க்கும் மேற்பட்ட செல்ஃபி அனைத்தையும் இணையத்தில் 'என்.எஃப்.டி' (Non Fungible Token) எனப்படும் மாற்றமுடியாதக் குறியீடுகளுக்கு விற்கலாம் என்று நினைத்தார்.

மின்னிலக்க நாணயங்களின் இன்னொரு வடிவம் இந்த என்எஃப்டி குறியீடுகள்,

மின்னிலக்கச் சொத்துகளை விற்று இவற்றைப் பெறலாம்.

இந்தக் குறியீடுகளுக்கு நிஜ உலகத்தில் பண மதிப்பு உண்டு.

நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள், ஓவியர்கள் போன்றவர்கள் தங்கள் மின்னிலக்க படைப்புகளை விற்று என்.எஃப்.டி குறியீடுகளைப் பெற்று வருகின்றனர்.

இந்த மின்னிலக்க பரிவர்த்தனைகளில் பெரும் பணம் ஈட்டப்படுகிறது.

கொஸாலியும் இந்தத் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்டார்.

'ஓப்பன்சீ' என்ற 'என்.எஃப்.டி.' மின்னிலக்க விற்பனைத் தளத்தில் ஜனவரி 9 அன்று ஒவ்வொரு செல்ஃபி படத்தையும் 3 அமெரிக்க டாலருக்கு விற்பனைக்கு விட்டார்.

-

ஆனால் இந்தோனீசிய பிரபலங்களின் கண்களில் இது பட, அவர்கள் இதைப் பற்றி சமூக ஊடகங்களில் பேசினர்.

கிராக்கி அதிகமானதும் செல்ஃபி படங்களின் விலை மளமளவென்று ஏறியது.

யாரிடம் அதிக படங்கள் உள்ளன என்ற போட்டாப்போட்டி ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஒரு செல்ஃபி படம் மட்டும் சுமார் 1,200 டாலுக்கு விற்றது.

1,000க்கும் மேற்பட்ட செல்ஃபி படங்களை விற்று, இப்போது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார் கொஸாலி.