பூப்பந்து: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர்
சிங்கப்பூர்: ஆட்டம் ஆடாமலே சிங்கப்பூரின் பூப்பந்து வீரர்கள் இந்திய பொதுவிருதுப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர். சிங்கப்பூர் வீரர்கள் டெரி ஹீ, டான் வெய் ஹான் இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர். சிங்கப்பூரின் தங்கமகன் லோ கியன் இயூ (படம்), ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இவர்களுக்கு எதிராக இந்திய பொதுவிருதுப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் களமிறங்கவிருந்த வீரர்கள் சிலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதால் ஆட்டம் ஆடாமலே சிங்கப்பூர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து மூன்றாவது போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார் லோ.
ஒலிம்பிக்கில் டென்மார்க் இல்லை
கோப்பன்ஹேகன்: பெய்ஜிங்கில் இவ்வாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு டென்மார்க் அதிகாரபூர்வ அரசதந்திரக் குழுவை அனுப்பாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜெப் கோஃபோட் தெரிவித்துள்ளார்.
"சீனாவில் மனித உரிமை மீறல் தொடர்பாக நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.
"சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதில்லை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது," என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அண்மையில் பிரஸ்ட் நகரில் இந்த விவகாரம் தொடர்பாக கூடி விவாதித்தன. ஆனால், இதில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை அவற்றால் எட்ட முடியவில்லை. அதைத் தொடர்ந்து டென்மார்க் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
சீனாவின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி அமெரிக்கா அதிகாரபூர்வ அரசதந்திரக் குழுவை அனுப்புவதில்லை என்று முடிவெடுத்தது.
அந்நாட்டின் இந்த முடிவைப் பின்பற்றி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான் போன்ற நாடுகளும் பெய்ஜிங் ஒலிம்பிக்கைப் புறக்கணித்த நிலையில் தற்போது டென்மார்க்கும் சேர்ந்துள்ளது.
இந்நிலையில், கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளால் நெதர்லாந்தும் அதிகாரபூர்வ அரசதந்திர குழுவை அனுப்புவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெறுவதாகக் கூறப்படுவதை நிரகரித்துள்ளது.

