சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் வகை கொவிட்-10 கிருமித்தொற்று அலை உச்சவரம்பைத் தொடும் விளிம்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அடுத்த சில வாரங்களுக்கு தினமும் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
கொள்ளைநோய்ப் பரவல் தலைதூக்கியபோது கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி ஆஸ்திரேலியா கிருமிப் பரவலை கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது அதனைப் பாதித்துள்ள ஓமிக்ரான் அலையால் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் கொவிட்-19 கிருமிப் பரவலை சகித்துக்கொண்டு வாழும் அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன.
இவ்வாண்டு மட்டும் ஆஸ்திரேலியாவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர். 2020, 2021ஆம் ஆண்டுகளில் பதிவான மொத்த கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 200,000 மட்டுமே.
"பிரச்சினை இன்னமும் ஓயவில்லை, வரும் வாரங்களில் ஆஸ்திரேலியாவில் ஏராளமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகும் என்று நினைக்கிறேன்," என்று மூத்த சுகாதார அதிகாரி பால் கெல்லி செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஓமிக்ரான் அலையைக் குறிப்பிட்டுச் சொன்னார். "எனினும், சில மாநிலங்களில் நிலவரத்தைப் பார்க்கும்போது கிருமித்தொற்று சம்பவங்கள் உச்சவரம்பை நெருங்குவதுபோல் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

