கோலாலம்பூர்: ஓமிக்ரான் உருமாறிய கிருமி குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்பதால் யாரும் வேண்டுமென்றே கிருமித் தொற்றுக்கு ஆளாக வேண்டாம் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிருமித்தொற்றுக்கு எதிராக ஒவ்வொருவரின் எதிர்ப்புத் திறனும் பெருமளவில் மாறுபடும் என்றார் அவர்.
ஓமிக்ரானுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக் குறைவாக உள்ளது என்பதால், கூட்டு நோயெதிர்ப்பைப் பெறுவதற்கோ அல்லது தடுப்பூசியை மறுப்பதற்காகவோ தானாகவே கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடாது என்றார் அவர்.
"ஒவ்வொருவரிடமும் கிருமியின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் அல்லது அதன் தாக்கம் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று நமக்கு தெரியாது.
"ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாவது கூட்டு நோயெதிர்ப்பைக் கொடுக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியிலான எந்த ஆதாரமும் இல்லை," என்றார் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின்.
ஹெச்ஐவி தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்தார். அப்போது கூட்டு நோயெதிர்ப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில்அளித்த அவர் இவ்வாறு சொன்னார்.
மாறாக மக்கள் விரைவில் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
கிறிஸ்மஸ், பள்ளி விடுமுறைகள், புத்தாண்டு, தைப்பூசம், சீனப் புத்தாண்டு ஆகியவற்றின்போது மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதன் விளைவாக, பிப்ரவரி மாதத்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கைரி கூறினார்.
மேலும், ஐந்து முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கு மலேசியா இம்மாத இறுதியில் தடுப்பூசி போடத் தொடங்கும் என்றும் கைரி சொன்னார்.
கிருமித்தொற்றை நிரந்தரநோயாக கையாள மலேசியா தயாராகி வருவதற்கான, அடுத்த கட்ட நடவடிக்கை இது.
பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இம்மாதம் 6ஆம் தேதி சுகாதார அமைச்சு கூறியது.
மலேசியாவில் கடந்த சில வாரங்களில் பதிவான தொற்றுச் சம்பவங்களில் 10 விழுக்காட்டு சம்பவங்கள், ஐந்து முதல் 11 வயதுடைய பிள்ளைகளிடம் காணப்பட்டதாக கொவிட்நவ் தரவுகள் கூறுகிறது.
மலேசியாவில் இதுவரை 2,808,347 பேரைக் கிருமி தொற்றியது, கிட்டத்தட்ட 32,000 பேர் மாண்டுவிட்டனர்.

