'இந்தோனீசிய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடையும்'
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு வேகமாக வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருமித்தொற்றுச் சம்பவங்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க சரிவால், கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் எல்லைகளைத் திறக்கவும் வழிவகுக்கிறது.
இந்தோனீசியா பெருமளவில் ஏற்றுமதி செய்யும் தெர்மல் கரி, கச்சா பாமாயில் ஆகியவற்றின் விலை சென்ற ஆண்டு உயர்ந்தன. இதுமட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 20 பில்லியன் மதிப்புமிக்க இரும்பு, எஃகு ஆகியவற்றையும் இந்தோனீசியா சென்ற ஆண்டு ஏற்றுமதி செய்தது. இது கிட்டத்தட்ட இந்தோனீசியாவின் பாமாயில் ஏற்றுமதிக்குச் சமமாகும்.
"இந்தோனீசியாவின் பொருளாதாரம் ஐந்து விழுக்காடு உயரும். எல்லாம் சீராக நடந்தால், அதைவிடவும் கூடுதல் வளர்ச்சி இருக்கும்," என்றார் கடல்சார், முதலீட்டு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு கிரீஸில் மாதாந்திர அபராதம்
ஏதன்ஸ்: தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்திர அபராதம் விதிக்க கிரீஸ் திட்டமிட்டு வருகிறது.
அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100 யூரோ
(154 சிங்கப்பூர் வெள்ளி) அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த தொகை கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்படும் என்றும் அதன் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் சொன்னார்.
சென்ற நவம்பர் மாதம் கிட்டத்தட்ட 520,000 மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட பிறகு, 220,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர். எஞ்சியுள்ள மற்றவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் வகையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணை வாங்கும் பிலிப்பீன்ஸ்
மணிலா: பிரமோஸ் ஏவுகணை வாங்குவது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்று பிலிப்பீன்சின் தற்காப்பு அமைச்சர் டெல்ஃபின் லொரேன்ஸா கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஏவுகணையுடன் மூன்று மின்கலன்கள், கட்டமைப்பு நிபுணர்கள், ஆகியவற்றை வழங்கி, தளவாட உதவியையும் வழங்கும் என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் லொரேன்ஸா தெரிவித்தார்.
இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக நடத்தும் பிரமோஸ் நிறுவனம், அந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
உலகிலேயே வேகமான ஏவுகணை அது என்று கூறப்படுகிறது.

