விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
d6325313-c76f-429b-b0e9-9ed43a5d23db
-

‌சூப்பர் கிண்ணம்: 12வது முறையாக வாகை சூடிய ரியால் மட்ரிட்

ரியாத்: சவூதி அரேபியாவில் நடந்த ஸ்பானிய ‌சூப்பர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை எளிதில் வென்றது ரியால் மட்ரிட்.

அத்லெட்டிக் பில்பாவ் குழுவிற்கு எதிராக 38வது நிமிடத்தில் ரியால் மட்ரிட் குழுவின் லுக்கா மோட்ரிச் முதல் கோலைப் போட்டார். பிற்பாதி ஆட்டத்தில் எதிரணி வீரர் பந்தைக் கையால் கையாண்ட தப்பாட்டத்திற்காக ரியால் மட்ரிட் குழுவிற்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கினார் கரிம் பென்சிமா. அடுத்த சில நிமிடங்களில் தப்பாட்டம் காரணமாக ரியால் மட்ரிட் வீரர் எடர் மிலிடா சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.

இதற்காக கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பில்பாவ் வீரர் கார்சியா உதைத்த பந்தை மட்ரிட்டின் கோல்காப்பாளர் கோர்டோயிஸ் கோலாக விடாமல் தடுத்துவிட்டார்.

இதனையடுத்து 2-0 என்ற கோல்கணக்கில் வென்ற ரியால் மட்ரிட், 12வது முறையாக ஸ்பானிய சூப்பர் கிண்ணத்தைத் தனதாக்கியுள்ளது.

கிளோப்: பட்டத்தை வெல்வதற்கு விடாமல் போராடுவோம்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள லிவர்பூல் குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப், முதலிடத்தைப் பிடிக்க மான்செஸ்டர் சிட்டியை விடாமல் துரத்துவோம் என்றார்.

பட்டம் வெல்வதற்கான அனைத்தையும் லிவர்பூல் குழு செய்யும் என்றும் அவர் சொன்னார்.

முதலிடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டியைவிட ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியுள்ள லிவர்பூல்,

11 புள்ளிகள் குறைவாகப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

நட்சத்திர வீரர்கள்

முகமது சாலா, சாடியோ மனே ஆகியோர் இல்லாமல் நேற்று பிரான்ஃபோர்ட் குழுவிற்கு எதிராக விளையாடிய லிவர்பூல் குழுவிற்கு ஃபேபின்ஹோ, ஆக்ஸ்லேட்-சேம்பர்லைன், டகுமி மினாமினோ ஆகிய மூவரின் கோல்களும் அக்குழுவிற்கு 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றியைப் பெற்றுத் தந்தன.

லீக் கிண்ணத்தில் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போட முடியாமல் தடுமாறிய லிவர்பூலுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது அக்கோல்கள்.

இந்தியாவில் இருந்து திரும்பிய சிங்கப்பூர் வீராங்கனைக்கு தொற்று

சிங்கப்பூர்: காய்ச்சல் காரணமாக பூப்பந்துக்கான இந்திய பொதுவிருதுப் போட்டியில் இருந்து விலகிய சிங்கப்பூர் வீராங்கனை இயோ ஜியா மின் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். அப்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து அவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வந்தடைந்துவிட்ட தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக இயோ தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பொதுவிருதுப் போட்டியின் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் அனுபமா உபத்யாயாவை வென்ற இயோ, சென்ற வாரம் வியாழக்கிழமை முதல் உடல்நலமில்லாமல் உள்ளார்.

ஆஸ்திரேலிய பொதுவிருது: அடுத்த சுற்றில் நடால், ஒசாகா

சிட்னி: ஆண்கள் பிரிவில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய பொதுவிருதை வென்றுள்ள ஒரேயொருவரான ரஃபேல் நடால், அமெரிக்காவின் மார்கோஸ் கிரோனை 6-1, 6-4, 6-2 என வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இவர் 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் கனவோடு இப்போட்டியில் களமிறங்கியுள்ளார்.

பெண்கள் பிரிவில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா, கொலம்பியாவின் கேமிலாவை 6-3, 6-3 என வீழ்த்தி

அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.