பெய்ஜிங்: சீனப் புத்தாண்டை முன்னிட்டு பல சீன நகரங்கள் கொவிட்-19க்கு எதிராக எச்சரிக்கை நிலையைக் கடைப்பிடித்து வருகின்றன.
பெய்ஜிங் உள்பட பல சீன நகரங்களில் ஓமிக்ரான் கிருமி பரவி உள்ளதைத் தொடர்ந்து அவை எச்சரிக்கை நிலையைப் பின்பற்றுகின்றன.
சீனாவின் லுயோயாங், ஜியாங் போன்ற நகரங்கள், பயணிகள் தங்களது பயணம் குறித்த விவரங்களை மூன்று நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.
தங்கள் நகரத்திற்கு வருவதற்கு ஒருநாள் முன்னதாக, பயணத் திட்டம் குறித்த இணைய விண்ணப்பம் ஒன்றைப் பயணிகள் நிரப்பவேண்டும் என்று கூறியது யூலின் நகர நிர்வாகம்.
சென்ற வார இறுதியில் பெய்ஜிங், ஸென்ஷென் நகரங்களில் உள்ளூர் ஓமிக்ரான் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மூலம் கிருமி தொற்றியிருக்கக்கூடும் என்று அந்நகரத்தின் நோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி சொன்னார்.
பெய்ஜிங், மெய்ஷோ ஆகிய நகரங்களில் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை குறைந்தது, சீனாவின் ஐந்து மாநிலங்களில் உள்ளூர் ஓமிக்ரான் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே, கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளால் சீனாவின் பல நகரங்கள் முடங்கியுள்ளதால், நிறுவனங்களுக்கான பொருள் வரத்து பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவில் குறைந்தது 20 மில்லியன் பேர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஷியான், ஹெனான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

