பாரிஸ்: தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பிரெஞ்சு பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ளமுடியாது என அந்நாட்டு விளையாட்டுத் துறை கூறியுள்ளது.
"சட்டம் அனைவருக்கும் பொருந்தும். அவர் பார்வையாளராக இருந்தாலும் சரி, விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி.
"பிரெஞ்சு பொதுவிருது மே மாதம் தொடங்கவுள்ளது. அதற்குள் சூழ்நிலை மாறக்கூடும். ஆனால் நிச்சயமாக யாருக்கும் விதிவிலக்கு கிடையாது," என்றது அமைச்சு.
பிரான்சின் புதிய சட்டத்தின்கீழ், உணவகம், திரையரங்குகள், நீண்ட தூர ரயில்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை காண்பிப்பது கட்டாயம்.
இதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், பிரெஞ்ச் பொதுவிருதுப் போட்டியில் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியது.
இதற்கிடையே, தடுப்பூசி விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்ட ஜோக்கோவிச், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய விசா பெறத் தடை இருந்தாலும் அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என்றார் அதன் பிரதமர் ஸ்காட் மோரிசன்.
"சரியான சூழ்நிலையில் அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. அதுபற்றி அந்த நேரத்தில் பரிசீலிக்கப்படும்," என்றார் மோரிசன்.
இதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய பொதுவிருதுப் போட்டியில் ஜோக்கோவிச் பங்கேற்பதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆனால், தற்போதைய விசா ரத்து செய்யப்பட்டதால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் அவரது கனவு கலைந்தது.

