அபுதாபி: ஹுதி இயக்கத்தினரின் ஆளில்லா வானுர்தித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் நேற்று தாக்குதல் நடத்தின.
ஹுதி முகாம்களையும் தலைமையகங்களையும் குறிவைத்து, சானாவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. 11 பேர் கொல்லப்பட்டன.
யாரேனும் பிழைத்திருக்கிறார்களா என்று உறவினர்கள் இடிபாடுகளில் தேடி வருகின்றனர்.
இத்தாக்குதலுக்கு முன்பு, ஐக்கிய அரபு சிற்றரசுகள் தலைநகர் அபுதாபியில் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆளில்லா வானுர்தி மூலம் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் எரிபொருள் கலன் வெடித்ததில் இரு இந்தியர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என மூவர் உயிரிழந்தனர். அருகிலுள்ள கட்டுமானத் தளம் ஒன்றிலும் சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது.
'அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி' வளாகத்தில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் காயமடைந்த இரு இந்தியர்கள் உட்பட ஆறு பேர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் தூதரகம் கூறியது.
உடல்களை இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு
இதற்கிடையே, அபுதாபியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் மாண்ட இரு இந்தியர்களின் உடல்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

