உடல்நலமுள்ள சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசிகள் தேவை என்பதற்கு தற்போது எந்தச் சான்றும் இல்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் ஆய்வாளர் செளமியா சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) அன்று செய்தியாளர் கூட்டத்தில் அவ்வாறு கூறியுள்ளார்.
ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக காலப்போக்கில் கொவிட்-19 தடுப்பூசிகளின் செயல்திறன் ஓரளவுக்குக் குறைவதாகத் தெரிகிறது.
ஆனால் யாருக்குத் தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகளை நடத்தவேண்டும் என்று திருவாட்டி செளமியா சொன்னார்.
இந்நிலையில் சில உலகநாடுகள் சிறுவர்களுக்குக் வடுதல் தடுப்பூசி போடத் தயாராகி வருகின்றன.
இஸ்ரேல் 12 வயது அல்லது அதற்கு அதிகமான வயதுள்ள சிறுவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போட்டுவருகிறது.
அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அண்மையில் 12 முதல் 15 வரையிலான சிறுவர்களுக்குத் மூன்றாவது தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்தது.
ஜெர்மனியும் ஹங்கேரியும், 12 முதல் 17 வயது வரையிலான இளையர்களுக்குத் தடுப்பூசி போடும்படி பரிந்தரை செய்துள்ளன.
உலகநாடுகள் தங்கள் மக்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் போடுவது பற்றி எவ்வாறு பரிசீலிக்கலாம் என்பதைப் பற்றி விவாதிக்க உலக சுகாதார நிறுவனத்தின் தலைசிறந்த நிபுணர்கள் இந்த வாரம் சந்திக்கவுள்ளனர்.
"கடும் நோய், மரணம் ஆகியவை ஏற்படும் அதிக அபாயத்தில் உள்ளவர்களைக் காப்பதே கூடுதல் தடுப்பூசிகளின் நோக்கம். முதியவர்கள், நோய் தடுப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியவர்கள் அதிக அபாயத்தில் உள்ளார்கள்," என்று திருவாட்டி செளமியா சொன்னார்.

