உலகிலேயே ஆக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சத்தில் பெண் ஒருவர் நிற்பதைக் கட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலாகி வருகிறது.
சாகசம் நிகழ்த்தவோ, செய்தியில் வரவேண்டும் என்பதற்காகவோ இவர் இந்தச் செயலைப் புரியவில்லை. ஐக்கிய அரபு சிற்றரசுகளின் எமிரேட்ஸ் விமான நிறுவன விளம்பரத்தில், விமானச் சிப்பந்தி சீருடை அணிந்திருக்கும் இவர் பங்கெடுத்தார்.
இதே புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உச்சியில், நிக்கோல் ஸ்மித் லூட்விக் எனும் இப்பெண் நிற்பதைக் காட்டும் காணொளி ஒன்று கடந்த ஆண்டு வெளிவந்து இருந்தது.
"நாங்கள் (எமிரேட்ஸ்) உயர பறக்கிறோம்" என்ற செய்தியை இந்தப் பெண் சொல்லும் விதத்தில் அந்தக் காணொளி தயாரிக்கப்பட்டிருந்தது.
இம்முறை மீண்டும் கையில் பதாகைகளுடன், 828 மீட்டர் உயர புர்ஜ் கலிஃபாமீது ஏறி நின்றார் நிக்கோல்.
துபாயில் 'துபாய் எக்ஸ்போ' கண்காட்சி நடைபெற்று வருகிறது. மார்ச் இறுதிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தக் கண்காட்சிக்கு விளம்பரம் ஏற்படுத்தும் வகையில் எமிரேட்ஸ் விமானம்மூலம் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
"நான் இன்னும் இங்கேயேதான் இருக்கிறேன்" என்று நிக்கோல் சொல்வதைக் காட்டும் பதாகைகளுடன் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை சற்று வித்தியாசமாக அவருக்குp பின்புறம் எமிரேட்ஸ் விமானம் பறக்கிறது. 'துபாய் எக்ஸ்போ'வை விளம்பரப்படுத்தும் விதமாக அந்த விமானம் அவருக்குப் பின்னால் பறக்கிறது.
அவ்வளவு உயரத்தில் நிற்கும் நிக்கோல், விமானத்தைப் பார்த்து கையசைக்கும் காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஆவார் நிக்கோல்.
முறையாக பயிற்சி கொடுத்து இவரை பல கட்ட சோதனைகளுக்கு பிறகே இந்த விளம்பரத்திற்காக தேர்வுசெய்து நடிக்க வைத்துள்ளது எமிரேட்ஸ். மிகுந்த பாதுகாப்போடு, முறையான ஏற்பாடுகளை மேற்கொண்ட பிறகே இந்தக் காணொளி எடுக்கப்பட்டது.
இந்த விளம்பரத்திற்குப் பின் இணைய உலகில் புதிய பிரபலமாக, மாடலாக உருவெடுத்துள்ளார் நிக்கோல்.