கொவிட்-19 பெருந்தொற்று முடிவைக்கூட இன்னும் நெருங்கவில்லை

கொவிட்-19 பெருந்தொற்று முடிவைக்கூட இன்னும் நெருங்கவில்லை

2 mins read
db729652-8b4e-47ed-9745-c1a5565a2554
ஆர்மேனியா நாட்டில் ரயில் ஒன்றில் கிருமி நாசினியைத் தெளிக்கும் ஊழியர். படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 பெருந்தொற்று இன்னும் அதன் இறுதிக்கட்டத்தைக்கூட நெருங்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் திரிபு (variant) அபாயமற்றது என்று கூறப்படுவதை அவர் எச்சரித்தார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள உலக சுகாதார நிறுவன தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தப் பெருந்தொற்று முடிவைக்கூட இன்னும் எட்டவில்லை," என்று சொன்னார்.

கடந்த நவம்பரில் தெற்கு ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் திரிபு, உலகம் முழுவதும் காட்டுத்தீபோல பரவி வருகிறது. அதை லேசானது என எடைபோட வேண்டாம் என்று டாக்டர் டெட்ரோஸ் மீண்டும் எச்சரித்தார்.

இதற்கு முன்னர் பரவிய திரிபுகளைவிட ஓமிக்ரான் வேகமாகப் பரவக்கூடியதாக இருந்தாலும், அது கடுமையான நோய்ப் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.

எனவேதான், பெருந்தொற்றுச் சூழலில் இருந்து, மனிதகுலம் வாழக்கூடிய நிரந்தர நோயாக கொவிட்-19 மாறுகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஆனால், அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகும்போது, கடுமையாக நோய்வாய்ப்படுவோர், மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஓமிக்ரான் பரவலால் அதிகரித்துள்ள கொவிட்-19 பாதிப்பு, சில நாடுகளில் உச்சத்தை எட்டியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

"இது, அண்மைய தொற்று அலையின் மிக மோசமான கட்டம் ஒரு முடிவுக்கு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்றாலும், எந்தவொரு நாடும் ஆபத்தைவிட்டு இன்னும் விலகவில்லை," என்றார் அவர்.

சில இடங்களில் கொவிட்-19 கிருமியைக் கட்டுக்கடங்காமல் பரவவிட்டால் புதிய, மேலும் ஆபத்தான திரிபுகள் உருவெடுப்பதற்கான சாத்தியம் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.