ஊழியர் தேவையைச் சமாளிக்க மாணவர்களுக்கு அழைப்பு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என ஆஸ்திரேலியா எச்சரிக்கை

ஊழியர் தேவையைச் சமாளிக்க மாணவர்களுக்கு அழைப்பு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என ஆஸ்திரேலியா எச்சரிக்கை

2 mins read
c8148630-9ea9-4911-b6fe-0e9b1b194cf2
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நில­வும் கடுமையான ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க அதி­ரடி திட்­டத்தை அறி­வித்­துள்­ளார் அதன் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன்.

தங்­கள் நாட்­டில் வேலை செய்­யத் தயா­ராக உள்ள வெளிநாட்டு மாண­வர்­க­ளுக்­கும் வேலை விடுப்­பில் செல்­லும் வெளி­நாட்­டி­ன­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லிய அரசு விசா கட்­ட­ணத்­தில் தள்­ளு­படி வழங்­கும் என்று மோரி­சன் அறி­வித்­துள்­ளார்.

இத்திட்டம் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஊழியர் தேவையை, குறிப்­பாக விருந்­தோம்­பல், விவ­சா­யத் துறை­களில் உள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் சொன்னார்.

வேலை செய்ய விரும்­பும் மாண­வர்­க­ளுக்­கும் வேலை விடுப்பு விசாவில் வரும் வெளி­நாட்­டி­ன­ருக்­கும் 630 ஆஸ்­தி­ரே­லிய டாலர் (612 சிங்­கப்­பூர் வெள்ளி) விசா கட்­ட­ணம் தள்­ளு­படி செய்­யப்­படும் என்று மோரி­சன் சொன்­னார்.

இத்­திட்­டம் மாண­வர்­க­ளுக்கு அடுத்த எட்டு வாரங்­க­ளுக்­கும் வேலை விடுப்பு விசா வைத்துள்ள வெளி­நாட்­டி­ன­ருக்கு 12 வாரங்களுக்­கும் பொருந்­தும் என்றார் அவர்.

அதிக கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கார­ண­மாக ஆஸ்­தி­ரே­லிய மருத்­து­வ­ம­னை­கள் மட்­டு­மல்­லா­மல், நிறு­வ­னங்­களும் சில்­லறை வர்த்­த­கங்­களும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று மதிய நில­வ­ரப்­படி ஒரே நாளில் 80,000க்கும் அதி­க­மான தொற்றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

அங்கு செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று ஆக அதி­க­மாக 77 பேர் கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­கி­னர்.

இனி­வ­ரும் நாட்­களில் உயி­ரி­ழப்பு மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றார் தலைமை சுகா­தார அதி­காரி பால் கெல்லி.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள், தொற்­றுக்கு ஆளா­ன­வ­ரோடு நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தால் தனி­மைப்­ப­டுத்­த­ப்பட்­ட­வர்­கள் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் ஆஸ்­தி­ரே­லிய வர்த்­த­கங்­கள் தேவை­யைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­று­கின்­றன.

பொருள் விநி­யோ­கம் பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் சில கடைக்­கா­ரர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் பொருள்­களை வாங்­கு­வ­தற்கு வரம்­பு­களை நிர்­ண­யித்­துள்­ள­னர்.

ஒவ்­வொரு நாளும் 10 முதல் 50 விழுக்­காட்டு ஊழி­யர்­கள் வேலைக்கு வரு­வ­தில்லை என்று உணவு, தள­வாடத் துறையைச் சார்ந்த நிறு­வ­னங்­கள் கூறின.

ஊழி­யர் பற்­றாக்­கு­றையை எதிர்த்து, சிட்­னி­யின் மிகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னை­யின் தாதி­யர்­கள் பேரணி நடத்­தி­னர்.