விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
7590c01f-1935-420a-89c9-74350a71aafc
-

பிரிமியர் லீக்: வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட செல்சி

பிரைட்டன்: பிரைட்டன் காற்பந்துக் குழுவிற்கு எதிராக வெற்றியைப் பெற முடியாமல் போன செல்சி, 1-1 என்ற கோல்கணக்கில் சமன் செய்தது. இதனால் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கான செல்சியின் நம்பிக்கை சற்று தளர்ந்துபோனது.

தொடக்கத்தில் இருந்தே மோசமாக விளையாடிய செல்சிக்கு, ஹக்கிம் ஜியெக்கின் கோல் 28வது நிமிடத்தில் முன்னிலை பெற்றுத் தந்தது. ஆனால் முன்னிலையைத் தக்க வைத்து வெற்றியை ருசிக்க தவறியது செல்சி.பிரைட்டனின் ஆடம் வெப்ஸ்டர் 60வது நிமிடத்தில் கோல் போட்டு செல்சியைச் சமன் செய்தார்.

"நாங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைந்து உள்ளோம். வீரர்களுக்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது. அதைத் தவிர வேறு வழியில்லை," என்றார் செல்சி நிர்வாகி. டிசம்பர் மாதம் முதல் 15 ஆட்டங்களில் விளையாடியுள்ளது செல்சி.

கடைசி ஏழு லீக் ஆட்டங்களில், ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது செல்சி. பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டியைவிட ஓர் ஆட்டம் அதிகமாக விளையாடியுள்ளபோதும் 12 புள்ளிகள் குறைவாகப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

எவர்ட்டன் குழுவின் தற்காலிக நிர்வாகியாக டங்கன் ஃபெர்குசன்

லண்டன்: எவர்ட்டன் காற்பந்துக் குழுவின் தற்காலிக நிர்வாகியாக டங்கன் ஃபெர்குசன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எவர்ட்டன் வீரரான ஃபெர்குசன் 273 ஆட்டங்களில் விளையாடி 72 கோல்களைப் போட்டுள்ளார். இவரின்கீழ் முதல் ஆட்டமாக சனிக்கிழமையன்று ஆஸ்டன் வில்லாவை எதிர்கொள்கிறது எவர்ட்டன். நார்விச் குழுவிடம் 2-1 எனத் தோற்ற பிறகு, எவர்ட்டன் நிர்வாகி ரஃபா பெனிடெஸ், சென்ற 16ஆம் தேதி பதவிநீக்கப்பட்டார்.

குறைந்த விலையில் உலகக் கிண்ணக் காற்பந்து டிக்கெட்டுகள்

தோஹா: கத்தாரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

கிருமிப் பரவல் காரணமாக நிலவும் நிச்சயமற்ற சூழலில், டிக்கெட்டுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. உலகக் கிண்ணப் போட்டியைக் கண்டுகளிக்க விரும்பும் உள்ளுர்வாசிகளும் வெளிநாட்டு ஊழியர்களும்

11 அமெரிக்க டாலருக்கு (14.84 சிங்கப்பூர் வெள்ளி) டிக்கெட்டுகளை வாங்கலாம். வெளிநாட்டு ரசிகர்களுக்கான டிக்கெட்டின் விலை 69 அமெரிக்க டாலராக இருக்கும் எனத் தெரிகிறது. இது 2018ல் ர‌ஷ்யாவில் விற்கப்பட்ட டிக்கெட் விலையில் மூன்றில் ஒரு பங்கு குறைவாகும். ஆனால், இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டின் விலை 1,607 அமெரிக்க டாலர் வரை இருக்கக்கூடும்.

இருப்பினும், மைதானத்திற்குள் எத்தனை ரசிகர்களுக்கு அனுமதி உண்டு என்பது பற்றி அதிகாரிகள் இன்னமும் எதுவும் சொல்லவில்லை. அரபு நாடு ஒன்றில் முதன்முதலாக நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி முடிவடையும்.