2 நிமிடங்களில் 2 கோல்கள்
லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் நெதர்லாந்து வீரர் ஸ்டிவன் பெர்குவைன் லெஸ்டருனான ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் இரண்டு நிமிடங்களில் இரண்டு கோல்கள் போட்டு தமது குழுவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். அதேபோல் கூடுதல் நேர ஆட்டத்தில் மிகக் குறைந்த நேர இடைவெளியில் இரண்டு கோல்கள் போட்டு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக ஸ்பர்ஸ் குழுவுக்கு களமிறங்கினார் பெர்குவைன்.
அப்பொழுது ஸ்பர்ஸ் குழு 1-2 என லெஸ்டர் குழுவிடம் தோற்கும் நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 95வது, 97வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் போட்டு ஸ்பர்ஸுக்கு 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி தேடித் தந்தார் பெர்குவைன்.
இதுபற்றிக் கூறும் பெர்குவைன், "இது அற்புதமான ஒன்று. காற்பந்து ரசிகர்களுக்கும் இது ஓர் அற்புதமான நாள். என்னைக் களமிறக்கியபோது குழு நிர்வாகி, விளையாடி கோல்கள் போடு என்றும் எதிரணி தற்காப்பு வீரர்களுக்கு தொல்லை கொடுக்கும்படியும் தாக்குதல் வீரர் ஹேரி கேனுக்கு அருகிலேயே இரு என்றும் கூறினார்.
ெரானால்டோவுக்கு எரிச்சல்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை நடந்த மற்றோர் போட்டி மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கும் பிரண்ட்ஃபர்ட் குழுவுக்கும் இடையிலானது. இதில் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில், யுைனடெட் அணி 2-0 என முன்னிலை பெற்ற நிலையில், யுனைடெட்டின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை துாக்கிவிட்டு அவருக்கு மாற்றாக மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட்டை குழுவின் நிர்வாகி ரானிக் போட்டார். இதில் தமது எரிச்சலை வெளிப்படையாகக் காட்டிய ரொனால்டோ, ஒரு கட்டத்தில் தமது மேலங்கியை எரிச்சலுடன் கீழே போட்டார்.
இதுபற்றிக் கருத்துரைத்த ரானிக் அவருடைய நடவடிக்கை வழக்கமானதுதான் என்றார். ஆனால், குழுவின் நிர்வாகியான தமக்கு ஒட்டுமொத்த குழுவின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டிய கடமை இருப்பதாக விளக்கினார்.
இதற்கு முந்தைய ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவுடனான ஆட்டத்தில், ஆட்டம் முடிய 13 நிமிடங்களே இருக்கும் நிலையிலும் 2-0 என முன்னிலை வகித்து பின்னர் ஆட்டம் முடியும்போது யுனைடெட் 2-2 என சமநிலை கண்டதை நினைவுகூர்ந்த ரானிக், அந்தத் தவறு மீண்டும் நிகழாமல் இருக்க தாம் முடிவெடுத்ததாகக் கூறினார்.
"ஆஸ்டன் வில்லாவுடனான ஆட்டத்தில் நான் மாற்று ஆட்டக்காரரை போட்டு தற்காப்பு அரணில் ஐந்து வீரர்களைக் கொண்டு விளையாடாமல் இருந்ததை எண்ணி என்மீது எனக்கே கோபம் வந்தது. ரொனால்டோவும், அவர் நிர்வாகியாக செயல்படும் காலம் வரும்பொழுது, நான் எடுத்த முடிவை புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார். நேற்றைய ஆட்டத்தில் யுனைடெட் குழு பிரண்ஃபர்ட்டை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் மாற்று ஆட்டக்காரராக வந்த மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் தமது பங்குக்கு கோல் போட்டு வெற்றியை உறுதி செய்தார்.
கலக்கும் இக்சான் ஃபாண்டி
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல காற்பந்து வீரர் ஃபாண்டி அகமதின் இளைய மகனும் தற்போது தாய்லாந்து காற்பந்துக் குழுவான பிஜி பாத்தும் அணியில் சேர்ந்து உள்ளவருமான இக்சான் ஃபாண்டி, பாத்தும் குழு விளைாடிய மூன்று ஆட்டங்களில் மூன்று கோல்கள் போட்டு அசத்தியுள்ளார்.
இதுபற்றிக் கூறும் இக்சான், "எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறேன். தாய்லாந்து காற்பந்து லீக்கில் சிறந்த முறையில் விளையாடி இந்த வட்டாரத்தில் மற்ற வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடும்போது என்னால் சிறப்பாக விளையாட முடியும் என நிரூபிக்க விரும்புகிறேன். நார்வே நாட்டில் மூன்று ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன்.
தற்பொழுது புதிய சூழலில் எனது காற்பந்து விளையாட்டை தொடர எண்ணுகிறேன்," என்று இக்சான் கருத்துரைத்தார்.

