இரவும் பகலும் கடலில் தத்தளித்த ஆடவர்

இரவும் பகலும் கடலில் தத்தளித்த ஆடவர்

1 mins read
fe1a83f0-48af-44f8-ab89-ce70ba4e2b63
27 மணிநேரம் கடலில் தத்தளித்து உயிர்த்தப்பிய லிசாலா (வலது பக்கத்திலிருந்து இரண்டாவது நபர்) படம்: ராய்ட்டர்ஸ் -

டோங்காவைச் சேர்ந்த ஒருவர், ஏறக்குறைய 27 மணி நேரம் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்துள்ளார். கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு மரத் துண்டை பிடித்துக்கொண்டதால் அவரது உயிர் தெய்வாதீனமாகத் தப்பியது. சனிக்கிழமையன்று டோங்கா தீவை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, 57 வயது லிசாலா கடலில் அடித்துச் செல்லப்பட்டார். பலமுறை கடலுக்குள் மூழ்கி பின்னர் வெளிவந்ததாக அவர் கூறினார். இறுதியாக ஒரு மரத்துண்டு கையில் தட்டுப்பட்டது.

மரத் துண்டுடன் அவர் உயிரையும் சேர்த்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

சுனாமியின் முதல் அலை தாக்கியபோது, அதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு மரத்தில் ஏறிக்கொண்டதாக லிசாலா கூறினார். மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது, இரண்டாவது பேரலை அடித்தது. அது அவரை கடலுக்கு இழுத்துச் சென்றது. இறுதியில், மரத்துண்டின் உதவியுடன் சுமார் 7.5 கிலோமீட்டர் தூரம் மெல்லமெல்ல நீந்தி வந்துள்ளார். அவர் கரையை வந்து சேர 27 மணி நேரம் எடுத்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், லிசாலாவுக்கு உடற்குறை உள்ளது. அவருக்கு நடப்பதில் சிரமம் இருக்கிறது. இருப்பினும், அவருடைய இந்தச் சாகச செயல், அவருக்கு 'ஆக்குவா மனிதன்', அதாவது கடல் மனிதன் எனும் பெயரைத் தந்துள்ளது.