ஆப்பிரிக்க கிண்ணம்: அல்ஜீரியாவை விரட்டியடித்த ஐவரி கோஸ்ட்
டோவாலா: ஆப்பிரிக்க கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சென்ற முறை வெற்றியாளரான அல்ஜீரியா அணி, ஐவரி கோஸ்ட்டிடம் மண்ணைக் கவ்வியது.
இத்தொடரில் நீடிக்க வேண்டுமானால், ஐவரி கோஸ்ட்டை வெற்றிகொண்டேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடிய அல்ஜீரியாவைக் கோல் எதுவும் போடவிடாமல் தடுத்து, முற்பாதி ஆட்ட நேரத்திலேயே இரண்டு கோல்களையும் போட்டுவிட்டது ஐவரிகோஸ்ட். இதற்கு நடுவில் அல்ஜிரியாவிற்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோலாக்க தவறிவிட்டார் ரியாத் மஹ்ரேஸ்.
அதைத்தொடர்ந்து மேலும் ஒரு கோல் போட்ட ஐவரி கோஸ்ட், அல்ஜீரியா ஒரு கோல் போடுவதற்குள், 3-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றுவிட்டது.
73வது நிமிடத்தில் அல்ஜீரியாவுக்கு ஆறுதல் கோல் விழுந்தது. எனவே, 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐவரி கோஸ்ட். இதனையடுத்து, 'இ' பிரிவில் ஆகக் குறைந்த புள்ளிகள் பெற்று ஆப்பிரிக்கக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் இருந்து வெளியேறியது அல்ஜீரியா.
ஒற்றை வீரரின் இரட்டை கோல்; லீக் கிண்ண இறுதிப் போட்டியில் லிவர்பூல்
லண்டன்: காற்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவின் இரட்டை கோல் பெற்றுத்தந்த வெற்றியைத் தொடர்ந்து, லீக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல்.
லீக் கிண்ணக் காற்பந்தின் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் ஆர்சனலுக்கு எதிராக அவர் அந்த இரண்டு கோல்களையும் போட்டார். சென்ற வாரம் நடந்த முதல் சுற்று ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலை கண்டது.
லிவர்பூலின் தூண்களான சாலாவும் சாடியோ மானேவும் இல்லாத இடத்தை ஜோட்டா நிரப்பிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
சிறப்பாக விளையாடத் தொடங்கிய ஆர்சனலின் தற்காப்பு அரணை உடைத்து 19வது நிமிடத்தில் ஒரு கோலும் 77வது நிமிடத்தில் விழுந்த இன்னோர் கோலையும் சேர்த்து
2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது லிவர்பூல்.
2016ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது லிவர்பூல். ஒன்பதாவது முறையாக லீக் கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ள லிவர்பூல், பிப்ரவரி 27ஆம் தேதி வெம்பிளியில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் செல்சியை எதிர்கொள்கிறது.
உலக கிண்ணம்: தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா
துபாய்: ஆஸ்திேரலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியின் சூப்பர்-12 பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது.
அக்டோபர் 30ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியையும் அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 2ஆம் தேதியன்று பங்ளாதேஷ் அணியையும் எதிர்கொள்கிறது இந்தியா.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் ேததிவரை 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டியை நடத்தும் நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. நவம்பர் 1ஆம் தேதி பிரிஸ்பனில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

