செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c600f196-83a1-4ea3-9053-3629a8450d0e
-

தொற்று வேகமாக அதிகரிக்கும் என ஹாங்காங் எச்சரிக்கை

ஹாங்காங்: ஹாங்காங்கின் நெரிசல்மிக்க குடியிருப்புப் பகுதியில் கொவிட்-19 கிருமித்தொற்று அதிவேகமாக பரவக்கூடும் என்றும் வெள்ளெலிகளுக்குத் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தொற்றுச் சம்பவங்களும் அதிகரிக்கும் என்றும் அதன் தலைமை நிர்வாகி கேரி லாம் எச்சரித்துள்ளார்.

குவாய் சுங் பகுதியில் அதிக ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு ஹாங்காங் மக்களிடம் அவர் வலியுறுத்தினார்.

ஜப்பானில் முதல்முறையாக 50,000ஐ கடந்த கிருமித்தொற்று

தோக்கியோ: வேகமாகப் பரவும் ஓமிக்ரான் கிருமித்தொற்று சம்பவங்களைத் தொடர்ந்து ஜப்பானில் முதல்முறையாக நேற்று 50,000க்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. தோக்கியோவில் மட்டும் 10,000த்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகின. தோக்கியோவில் கிருமித்தொற்றால் மேலும் மூவர் மாண்டனர். 12 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

தோக்கியோவில் 34.3 விழுக்காட்டு மருத்துவப் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. இந்த விகிதம் 50 விழுக்காடாக அதிகரிக்கும்போது, அங்கு அவசரநிலை கொண்டுவரப்படக்கூடும் என்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இம்மாதம் 21ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதிவரை, அங்குக் கடுமையான கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமூகத் தொற்று: கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் தைவான்

தைவான்: தைவான் சமூகத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கம்

கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கவுள்ளது.

தைவானில் கடந்த சில மாதங்களாகச் சமூக அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாவது மிக அரிதாக இருந்தது. இந்நிலையில் அங்கு தற்போது ஓமிக்ரான் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.

தைவானின் டாவ்யுவான் நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்துடன் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. எனவே, வெளிநாட்டிலிருந்து வருவோரிடமிருந்து தொற்று பரவியிருக்கும் என்று நம்பப்படுகிறது.