வெலிங்டன்: நியூசிலாந்தில் ஓமிக்ரான் பரவலுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், தன்னுடைய திருமணத்தையும் ரத்து செய்திருக்கிறார்.
நாட்டின் வடக்குத் தீவுகளில் உள்ள தலைநகர் ஆக்லாந்திலிருந்து தென் தீவுகளில் நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள அண்மையில் ஒரு குடும்பத்தினர் விமானப் பயணம் மேற்கொண்டனர்.
அந்தக் குடும்பத்தினர், விமானப் பணியாளர் ஒருவர் என மொத்தம் ஒன்பது பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதனால் நியூசிலாந்தில் சிவப்பு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.
உணவகங்கள், திருமணங்கள் போன்றவற்றில் குறைவானவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.
"கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான தொற்றுச் சம்பவங்களை நியூசிலாந்தில் எதிர்பார்க்கலாம். இருப்பினும் நியூசிலாந்து இன்னும் அதிகமான தயார் நிலையில் உள்ளது," என்றார் திருவாட்டி ஆர்டன்.
இவ்வேளையில் இந்த மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவிருந்த அவர், அதற்கான ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டதாகக் கூறினார்.
அதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, இதுதான் வாழ்க்கை என்று திருவாட்டி ஆர்டன் பதில் அளித்தார்.
தம்மைப் போல திருமணத்தை ரத்துசெய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்காக வருத்தப்படுவதாக அவர் சொன்னார்.
திருவாட்டி ஆர்டன் தொலைக்காட்சி படைப்பாளர் கிளார்க் கேஃபோர்ட் என்பவரை திருமணம் செய்யவிருந்தார். இருவருக்கும் மூன்று வயதில் மகள் இருக்கிறார்.

