சிட்டியின் 12 புள்ளிகள் முன்னிலை எதிர்பாராதது: பெப் கார்டியோலா
சவுத்ஹேம்டன்: இங்கிலிஷ் லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு பருவத்தில் மான்செஸ்டர் சிட்டி பெற்று வந்த தொடர் வெற்றிக்கு சவுத்ஹேம்டன் முற்றுப்புள்ளி வைத்தது.
தொடர்ந்து 13வது ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கிய சிட்டிக்கு ஏழாவது நிமிடமே கோல் போட்டு அதிர்ச்சி அளித்தது சவுத்ஹேம்டன்.
சிறப்பாக விளையாடிய சவுத்ஹேம்டன், வழக்கத்துக்கு மாறாக மந்தமாக விளையாடிய சிட்டிக்கு எதிராக மேலும் சில கோல்கள் போட்டிருக்கலாம். ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் சுதாரித்துக்கொண்டது சிட்டி. அக்குழுவின் லப்போர்ட்டே 65வது நிமிடத்தில் கோல் போட்டதால் ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.
வெற்றியைத் தவறவிட்டதற்குப் பிறகு பேசிய சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, "பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி 12 புள்ளிகள் முன்னிலை வகிப்பது தனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது," என்றார்.
வெஸ்ட்ஹேமைப் பின்னுக்குத் தள்ளியது மேன்யூ
லண்டன்: வெஸ்ட்ஹேம், மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுக்கள் மோதிய இபிஎல் போட்டியில் ஆட்ட நேரம் முழுவதுமே எந்த கோலும் விழவில்லை. எனவே, ஆட்டம் சமநிலை காணும் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் நிலவியது. அதனைப் பொய்யாக்கி வெஸ்ட்ஹேம்மைப் பின்னுக்குத் தள்ளியது மேன்யூவின் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய மார்க்ஸ் ரேஷ்ஃபர்ட் போட்ட கோல்.
காயம்பட்டதற்கான கூடுதல் நேரமான மூன்று நிமிடங்கள் முடிய முப்பது விநாடிகள் மட்டுமே மீதமிருந்தபோது ரேஷ்ஃபர்ட் அந்த கோலைப் போட்டார். இன்னோர் மாற்று ஆட்டக்காரரான கவானி பந்தை ரேஷ்ஃபர்ட்டிடம் அனுப்பி உதவினார்.
முதலில் 'ஆஃப்சைட்' என்று எழுந்த சந்தேகத்தின் பேரில் அந்த கோல், காணொளி உதவி நடுவர் முறையின்கீழ் பரிசீலித்ததில் கோலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது மேன்யூ.
இப்பருவத்தில் மாற்றம் காண்போம்: நியூகாசல் நிர்வாகி நம்பிக்கை
லீட்ஸ் குழுவின் கோல்காப்பாளர் இல்லான் மெஸ்லிரை ஏமாற்றி நியூகாசலின் ஷெல்வி பந்தை வலைக்குள் தள்ளினார். படம்: ஏஎஃப்பி
லீட்ஸ்: லீட்ஸ் காற்பந்துக் குழுவின் சொந்த மண்ணில் நியூகாசல் பெற்ற மகத்தான வெற்றி, இப்பருவத்தில் தனது குழு மாற்றம் காணும் என்ற நம்பிக்கை அளிப்பதாக சொன்னார் அதன் நிர்வாகி எடி ஹாவ்.
"நாம் ஒன்றும் மாண்டுபோய், புதைக்கப்பட்டுவிடவில்லை என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இனி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள்," என்றும் அவர் சொன்னார். இப்பருவத்தில் நியூகாசல் பெற்றுள்ள இரண்டாவது வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இபிஎல் பட்டியலில் இருந்து வெளியேறிவிடும் நிலையில் இருந்த நியூகாசல், லீட்ஸ் குழுவிற்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது. பி்ரீ-கிக் வாய்ப்பை 75வது நிமிடத்தில் கோலாக்கினார் ஷெல்வி.
முற்பாதி ஆட்டத்தில் இரு குழுக்களுமே கோல் போட தடுமாறின. நியூகாசலின் பல கோல் முயற்சிகளை லீட்ஸ் கோல்காப்பாளர் இல்லான் மெஸ்லிர் தடுத்துவிட்டார். எனினும், லீட்ஸ் வீரர் ஓருவரின் தப்பாட்டம் காரணமாக ஷெல்விக்குக் கிடைத்த பி்ரீ-கிக் வாய்ப்பின் மூலம் நியூகாசல் வெற்றி கோலைப் போட்டது.

