சிகாகோ: அமெரிக்காவில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளன.
ஓமிக்ரான் தொற்று காரணமாக மில்லியன்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஒரு மாத காலமாக அதிவேகமாக அதிகரித்து வந்த தொற்று சம்பவங்களால், பரிசோதனை மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், தீவிர சிகிச்சை பிரிவுகளில் நிலவிய ஊழியர் பற்றாக்குறை என விழிபிதுங்கிய அமெரிக்காவில் தொற்று சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளது நிம்மதி அளிப்பதாக உள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மெல்ல குறையும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
அண்மைய நாள்களில், நாட்டின் பல மாநிலங்கள் கிருமிப் பரவலின் உச்சத்தைக் கடந்துவிட்டன.
வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவில் 720,000 தொற்று சம்பவங்கள் பதிவாகின. இது சென்ற வாரத்தின் 807,000 எண்ணிக்கையைவிட குறைவாகும். அதுபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்காமல், நிலையாக உள்ளது.
புள்ளிவிவரங்கள் நம்பிக்கை அளித்தாலும், அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது.
அதாவது, முந்திய தொற்று காலங்களில் அறியப்பட்டதைவிட அதிகமான தொற்று சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
மேற்கு, தெற்கு பகுதியின் சில மாநிலங்களில் இன்னமும் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கின்றன. நிறைய மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன.
உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலான நாள்களில் 2,100க்கும் மேற்பட்டவர்கள் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்படுவதுமே அச்சுறுத்தல் நீடிப்பதற்குக் காரணம்.

