லண்டன்: தனக்கு ஆதரவான ஒருவரை உக்ரேனின் தலைவராக நியமிக்க ரஷ்யா சதி செய்வதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரேனை ஆக்கிரமிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரேனின் முந்திய அரசியல்வாதிகளுடன் ரஷ்ய உளவுப் பிரிவினர் தொடர்பில் உள்ளதாகவும் பிரிட்டன் கூறியது.
உக்ரேனின் யெவ்ஹென் முராயேவை, ரஷ்ய ஆதரவு தலைவராக நியமிக்க ரஷ்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அது கூறியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, உக்ரேன் விவகாரத்தில் பிரிட்டன் பதற்றத்தைத் தூண்டுவதாக சாடியது.
இந்நிலையில், உக்ரேனில் ரஷ்ய ஆதரவு தலைவர் நியமிக்கப்பட்டால், ரஷ்யா கடுமையாக தடைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் பிரிட்டன் எச்சரித்துள்ளது.
உக்ரேன் எல்லையில் ரஷ்யா தனது படைகளைக் குவித்து வருவதால், மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. நெருக்கடிக்குத் தீர்வுகாண ரஷ்யா, உக்ரேன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் அரசியல் ஆலோசகர்கள் நாளை பாரிசில் சந்திக்கவுள்ளனர்.

